
மு.க. ஸ்டாலின் (கோப்புப் படம்)
ஓமனில் கடத்தப்பட்ட தமிழக மீனவரை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வெளியுறவுத் துறை அமைச்சருக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் கோரிக்கை வைத்துள்ளார்.
ஓமன் துறைமுகத்தில் மீன்பிடி படகுகளில் பணிபுரிந்து வந்த 18 தமிழக மீனவர்களில் பெத்தாலிஸ் என்ற மீனவரை அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் கடத்திச் சென்றுள்ளனர்.
இது தொடர்பாக வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கருக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் எழுதியுள்ள கடிதத்தில்,
ஓமன் நாட்டின் துறைமுகத்தில் மீன்பிடிப் படகுகளில் வேலை செய்து வந்த தமிழ்நாட்டைச் சேர்ந்த 18 பேர் கொண்ட குழுவில், பெத்தாலிஸ் என்பவரும் பணிபுரிந்து வந்ததாக தெரிவித்துள்ளார்.
அந்த மீன்பிடிப் படகுகளில் பணிபுரிந்து வந்த 18 மீனவர்களின் ஊதியத்தை உரிமையாளர் தராததால் உரிமையாளருக்கும் மீனவர்களுக்கும் இடையே பிரச்னை நிலவி வந்த நிலையில், பெத்தாலிஸை அடையாளம் தெரியாத சிலர் கடத்திச் சென்றுள்ளதாக கூறப்படுகிறது
பெத்தாலியை உடனடியாகக் கண்டுபிடித்து, இந்தியாவுக்கு திருப்பிக் கொண்டுவர உரிய நடவடிக்கை எடுக்குமாறு பெத்தாலிஸின் மனைவி ஷோபா ராணி கோரிக்கை விடுத்துள்ளதை முதல்வர் குறிப்பிட்டுள்ளார்
இந்நிலையில், ஓமன் நாட்டிலுள்ள இந்தியத் தூதரகம் மூலம் பெத்தாலிஸை மீட்டு தாயகம் கொண்டுவர உரிய தூதரக நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை வைத்துள்ளார்.
செய்திகள் உடனுக்குடன்… வாட்ஸ்ஆப் சேனலில் ‘தினமணி’யைப் பின்தொடர…