அரூர்: தருமபுரி மாவட்டம் கடத்தூரில் இருந்து பாப்பிரெட்டிப்பட்டி செல்லும் பிரதான சாலையில் பொது மக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறாக கடத்தூரில் – 2 ,வெங்கட சமுத்திரத்தில் – 2, பையர் நத்தம் மற்றும் பாப்பிரெட்டிப்பட்டியில் தலா 1 என 6 டாஸ்மாக் மதுபானக்கடைகள் செயல்பட்டு வருகின்றன.
சட்டம் ஒழுங்கு மற்றும் விபத்துக்கு காரணமாக உள்ள இக்கடைகளை அகற்ற வேண்டும் என மக்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். இது குறித்து `இந்து தமிழ் திசை’ நாளிதழில் செய்தி வெளியானது. இந்நிலையில் பாப்பிரெட்டிப் பட்டியில் பொம்மிடி மெயின் ரோட்டில் இயங்கி வந்த டாஸ்மாக் கடையால் அப்பகுதியில் உள்ள பெண்கள் மற்றும் பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகினர்.
அங்கிருந்து டாஸ்மாக் கடையை மூட வேண்டும் என பொதுமக்கள் கடந்த ஆறு மாதத்துக்கும் மேலாக போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர். இதனையடுத்து அந்த டாஸ்மாக் கடை (2868) பாப்பிரெட்டி பட்டியில் நேற்று முன்தினம் முதல் நிரந்தரமாக மூடப்பட்டது. அக்கடை தென்கரைக் கோட்டை கிராமப் பகுதிக்கு இடமாற்றம் செய்யப்பட்டது.
இதனிடையே டாஸ்மாக் கடை மூடப்பட்டதற்கு மகிழ்ச்சி தெரிவித்து அப்பகுதியில் உள்ள வீட்டு வசதி வாரிய குடியிருப்பு சங்கத்தினர் மற்றும் குடியிருப்பு பகுதியில் உள்ள பெண்கள், பொதுமக்கள் ஏராளமானோர் நேற்று மூடப்பட்ட டாஸ்மாக் கடை முன்பு, பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும், தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி கொண்டாடினர். இதனால் டாஸ்மாக் கடை இல்லாத நகரமாக பாப்பிரெட்டிப்பட்டி மாறியது.