மதுரை: அறிவியல் பாடம் என்றாலே, அதை புரிந்துகொள்வது கடினமானது என்று அச்சப்படும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு எளிய செயல் விளக்கங்களுடன் அறிவியல் சார்ந்த ஆர்வத்தை ஏற்படுத்தி வருகிறது ‘விஞ்ஞான ரதம்’. அண்மையில் மதுரையில் உள்ள அரசுப் பள்ளிகளில் ‘விஞ்ஞான ரதம்’ வலம் வந்தது. அறிவியல் பாடத்தை ஒருவித பயத்துடன் அணுகும் மாணவர்களைகூட கலகலப்பாக்கி, உற்சாகமுடன் படிக்க தூண்டியது இந்த விஞ்ஞான ரதம். வழக்கமான செயல் விளக்கங்கள் மட்டுமின்றி ஆடல், பாடல், சின்னச் சின்ன கதைகள் மூலம் அறிவியலை விளக்கி மாணவர்களிடம் ஒரு கொண்டாட்ட மனநிலையை உருவாக்கினார் விஞ்ஞான ரதத்தின் திட்ட இயக்குநர் வி.அறிவரசன்.

தமிழகம் முழுவதும் சென்று அரசுப் பள்ளி மாணவர்களுக்கு அறிவியல் பாடங்கள் மீதான ஆர்வத்தை பள்ளி மாணவர்களிடையே விஞ்ஞான ரதம் ஏற்படுத்தி வருகிறது. இதுகுறித்து வி.அறிவரசன் கூறியதாவது: கிராமப்புறங்களிலுள்ள அரசுப் பள்ளி மாணவர்களும் அறிவியலை ஆழ்ந்து படித்து விஞ்ஞானியாக வேண்டும் என்ற நோக்கத்தில் பரிக்ஷன் அறக்கட்டளையை நிறுவிய சென்னையைச் சேர்ந்த உணவியல் விஞ்ஞானி பசுபதி, விஞ்ஞான ரதத்தை 2009-ம் ஆண்டு செப்டம்பரில் உருவாக்கினார். இந்த விஞ்ஞான ரதத்தில் இயற்பியல், வேதியியல், விலங்கியல், தாவரவியல் தொடர்பான அறிவியல் உபகரணங்கள் உள்ளன.

அரசுப் பள்ளி மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு நேரடியாகச் சென்று ஆடல், பாடல் மற்றும் செயல் விளக்கங்களுடன் அறிவியலை எளிதாக மாணவர்களுக்கு புரிய வைக்கிறோம். சின்னச்சின்ன கதைகளை சொல்லி, அதில் மாணவர்களையும் பங்கேற்க செய்து புரியாத புதிருக்கு விடை சொல்வோம். இதுவரை தமிழகம் முழுவதும் 3,800 அரசு மற்றும் உதவிபெறும் பள்ளிகளுக்குச் சென்று செயல் விளக்கங்கள் அளித்துள்ளோம். கடந்த 14 ஆண்டுகளில் இதுவரை 13.50 லட்சம் மாணவர்கள் விஞ்ஞான ரதத்தை பார்வையிட்டுள்ளனர். தற்போது மதுரை பகுதியிலுள்ள அரசு பள்ளி மற்றும் உதவிபெறும் பள்ளிகளில் அறிவியல் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம். அடுத்ததாக விருதுநகர் மாவட்டப் பள்ளிகளில் பயணத்தை தொடர உள்ளோம் என்று கூறினார்.

Source link

By Admin S

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: