திருப்பேர்,: திருவள்ளூர் மாவட்டம் பூண்டி ஒன்றியத்திற்கு உட்பட்டது திருப்பேர் ஊராட்சி. இங்கு அரசு, துவக்கப்பள்ளி கட்டடம் சேதமடைந்து உள்ளது.
எனவே இப்பள்ளி கட்டடத்திற்கு மாற்றாக புதிய கட்டடம் கட்ட வேண்டும் என பெற்றோர், ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்தனர்.
இதையடுத்து, 2022 — 2023ம் ஆண்டு குழந்தை நேய பள்ளி உட்கட்டமைப்பு மேம்பாட்டு நிதியில், இரண்டு வகுப்பறைகள் அமைக்க, 28 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது.
கடந்த மார்ச் கடைசி வாரம் பணி துவங்கியது. இப்பணியை ஜூன் 1ம் தேதி முடிக்க திட்டமிடப்பட்டிருந்தது. கோடை விடுமுறை முடிந்து பள்ளி துவங்கும் போது மாணவர்களுக்கு சிரமம் இல்லாத வகையில் புதிய வகுப்பறை கட்டடத்தில் அமர்ந்து பயிலும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்ட நிலையில், பள்ளி துவங்கி, ஐந்து மாதங்கள் ஆகியும் பள்ளி கட்டடப் பணி முடியவில்லை.
இதனால் பள்ளி மாணவர்கள் பழைய பள்ளி கட்டடத்தில் ஆபத்தான முறையில் பயின்று வருகின்றனர். மழைக்காலத்தில் மழைநீர் வகுப்பறையில் ஒழுகும் நிலை உள்ளதால், பெற்றோர் கவலை அடைந்துள்ளனர்.
எனவே பள்ளி கட்டடப் பணியை விரைந்து முடிக்க கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பெற்றோர் எதிர்பார்க்கின்றனர்.
இதுகுறித்து திருவாலங்காடு பி.டி.ஓ., அலுவலக அதிகாரி ஒருவர் கூறும்போது, ‘கட்டடப்பணி 90 சதவீதம் முடிந்துள்ளது. இம்மாத இறுதிக்குள் புதிய வகுப்பறை பயன்பாட்டுக்கு வரும்’ என்றார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
