`ஒரே நாடு ஒரே தேர்தல்’ திட்டம் குறித்த பேச்சு, கடந்த சில மாதங்களுக்கு முன்பு பா.ஜ.க மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளின் ஆதரவுக் குரலாகவும், காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் எதிர்ப்புக் குரலாகவும் வந்துகொண்டிருந்தது. கடந்த செப்டம்பரில் நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடர் பற்றி அறிவிப்பு வெளியானபோதே, அதற்கான மசோதாவை மத்திய பா.ஜ.க அரசு தாக்கல் செய்யப்போகிறது என்றெல்லாம் செய்திகள் வந்தன. ஆனால், மத்திய பா.ஜ.க அரசோ முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலையில், ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டம் தொடர்பாக ஆய்வுக் குழு ஒன்றை அமைத்தது.

அதில், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, மத்திய சட்டத்துறை அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால், காங்கிரஸ் மூத்த தலைவர் ஆதிர் ரஞ்சன் சௌத்ரி, மாநிலங்களவை முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் குலாம் நபி ஆசாத் உள்ளிட்டோர் இடம் பெற்றிருந்தனர். இருப்பினும், காங்கிரஸ் மூத்த தலைவர் ஆதிர் ரஞ்சன் சௌத்ரி, “நடைமுறையில் சாத்தியமற்ற மற்றும் அரசியலமைப்புரீதியில் செயல்படுத்த முடியாத இந்தத் திட்டம், அரசின் மறைமுக நோக்கங்கள் குறித்து கடுமையான கவலைகளை எழுப்புகிறது” எனக் கூறி, குழுவிலிருந்து விலகினார்.
இப்போது ஐந்து மாநிலத் தேர்தல் நடைபெற்றுவருவதால் பா.ஜ.க, காங்கிரஸ் ஆகிய இருபெரும் கட்சிகளும் தேர்தலில் கவனம் செலுத்தி வருகின்றன. இதனால், ஒரே நாடு ஒரே தேர்தல் பற்றிய பேச்சுகள் எதுவும் அவ்வளவாக வெளியில் வரவில்லை. இருப்பினும், நாடாளுமன்றத்துக்கும் சட்டமன்றங்களுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவதற்கான ஃபார்முலாவை உருவாக்கும் வேலையில் சட்ட ஆணையம் ஈடுபட்டிருப்பதாகவும், 2029-ல் இதை செயல்படுத்தப்பட வேண்டும் என்பதை நோக்கிப் பணிகள் நடைபெறுவதாகவும் தகவல்கள் வெளியாகின்றன. இந்த நிலையில், `ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்துக்கு, ஒவ்வொரு கட்சியுமே ஒருகட்டத்தில் ஆதரவளித்திருக்கிறது’ என, இந்தத் திட்டத்தின் ஆய்வுக் குழுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தெரிவித்திருக்கிறார்.

உத்தரப்பிரதேசத்தின் ரேபரேலியில் ஒரே நாடு ஒரே தேர்தல் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய ராம்நாத் கோவிந்த், “காங்கிரஸோ, பா.ஜ.க-வோ மத்தியில் ஆட்சியிலிருக்கும் எந்தவொரு கட்சிக்கும் ஒரே நாடு, ஒரு தேர்தல் பயனுள்ளதாக இருக்கும். இந்த திட்டக் குழுவின் உறுப்பினர்கள், மக்களுடன் சேர்ந்து இதை நடைமுறைப்படுத்துவது தொடர்பாக அரசாங்கத்துக்கு ஆலோசனைகளை வழங்குவார்கள். தேசிய அளவில் பதிவுசெய்யப்பட்ட அனைத்து அரசியல் கட்சிகளுடனும் நான் தொடர்புகொண்டு ஆலோசனைகளைக் கேட்டிருக்கிறேன். அதில், ஒவ்வொரு அரசியல் கட்சியுமே, ஒருகட்டத்தில் இதற்கு ஆதரவளித்திருக்கிறது. எனவே, நாட்டுக்கு நன்மை தரக்கூடிய வகையில் அனைத்துக் கட்சிகளும் ஆக்கபூர்வமான ஆதரவை வழங்குமாறு நாங்கள் கேட்டுக்கொள்கிறோம். ஏனெனில் இது தேசிய நலன் சார்ந்த விஷயம்” என்று கூறினார்.