கன்னியாகுமரி மாவட்டம் கோடிமுனை மீனவர் கிராமத்தில் உலக மீனவர்தினவிழா நேற்று இரவு நடைபெற்றது. இதில் கோட்டாறு மறைமாவட்ட முன்னாள் ஆயர் பீட்டர் ரெமிஜியூஸ், நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ், எம்.எல்.ஏ-க்கள் பிரின்ஸ், ராஜேஷ்குமார், நாடாளுமன்ற உறுப்பினர் விஜய்வசந்த், தி.மு.க மகளிரணி மாநில தலைவி ஹெலன் டேவிட்சன், தி.மு.க துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
இதில் கனிமொழி எம்.பி பேசுகையில், “மீனவர்களின் துயரங்களை ஏற்றுக்கொள்ளாமல், கொண்டாடப்பட வேண்டியவர்களை கொண்டாடாமல், மதிக்க வேண்டிய மீனவர்களுக்கு உரிய மரியாதை தராமால், பாகுபாடு காட்டி ஒதுக்கிவைக்கும் சூழலை நாம் பார்த்துக்கொண்டிருக்கிறோம். உலகம் சந்திக்கும் சவால்களில் ஒன்று சூழலியல் மாற்றம். சூழலியல் மாற்றத்தால் பனிபிரதேசத்தில் பனி உருகி கடல்மட்டம் உயரும் நிலை உள்ளது. கடலில் மீன் பிடிப்பவர்களுக்கு, கடல் தாய் போன்றது. அதில் எது என்னுடைய தாய் என்பது இல்லை. தாய் எல்லோருக்கும் சொந்தம். தாயில் பிரிவினை இல்லை. இது உன்னுடைய எல்லை, இது என்னுடைய எல்லை எனக்கூறி மீனவர்கள் கைது செய்யப்படுவது, அவர்களிடமிருந்து படகுகள் பிடுங்கப்படுவதும் நடக்கிறது.

நம் மூதாதையர்கள் கடல் எனக்குச் சொந்தம் என கடல் கடந்து வாணிபம் செய்தார்கள். தமிழர்கள் கடல்கடந்து சென்று கடல் எல்லையற்றது என்று கடலில் மீன் பிடித்தார்கள். ஆனால், இப்போது கடலில் எல்லைகள் வகுக்கப்பட்டு, பிரிவினை ஏற்படுத்தியதால் சிறையில் வாடிக்கொண்டிருக்கிறார்கள். இத்தனை துன்பங்களுக்கும் மத்தியில் இருக்கும் அரசாங்கம் எந்தவித பதிலையும் சொல்ல தயாராக இல்லை. தீர்வு காணவும் அவர்கள் தயாராக இல்லை. கடலரிப்பு பிரச்னை, மீனவர்கள் பாதிக்கப்படும் பிரச்னையில் மத்திய அரசுக்கு கவலை இல்லை. மீனவர்களின் படகுகள் பிடித்து வைக்கப்படுவதில் அக்கறை இல்லை. ஆனால் அரசியல் செய்வதிலும், மக்களை பிரித்தாளுவதிலும் கண்ணும் கருத்துமாக இருக்கிறார்கள். மக்களுக்கு இடையே சாதியின் பெயரால், மதத்தின் பெயரால் பிரச்னைகளை உருவாக்குவது, அவர்களிடம் காழ்ப்புணர்ச்சி உருவாகி, ஒருவரை ஒருவர் வெறுத்துக் கொள்ளக்கூடிய சூழலை எல்லா இடங்களிலும் உருவாக்கிக்கொண்டிருக்கிறார்கள்.