சென்னை: இந்தியா – ஆஸ்திரேலியா இடையேநடைபெற்ற உலகக் கோப்பை கிரிக்கெட் இறுதிப் போட்டியை பெரிய திரையில் கண்டுகளிக்க, சென்னை மெரினா மற்றும் பெசன்ட்நகர் கடற்கரையில் ரசிகர்கள் நேற்று குவிந்தனர்.ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரின் இறுதி ஆட்டம் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நேற்று நடந்தது. இதில், இந்தியா – ஆஸ்திரேலியா அணிகள் மோதின. இந்தப் போட்டியில் வென்று, உலகக் கோப்பையை இந்திய அணி கைப்பற்ற வேண்டும் என நாடு முழுவதும் கிரிக்கெட் ரசிகர்கள் பிரார்த்தித்து வந்தனர். தங்களது ஆவலை பல்வேறு வடிவங்களில் வெளிப்படுத்தி வருகின்றனர். இறுதிப் போட்டியை ரசிகர்கள் கண்டுகளிக்க ஏதுவாக பொது இடங்களில் ஒளிபரப்பு செய்யவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
அதன்படி, தமிழக விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் சென்னை மெரினா கடற்கரை மட்டும் பெசன்ட் நகர் கடற்கரையில் மிகப்பெரிய எல்இடி திரைகளை அமைத்து இறுதிப் போட்டியை பொதுமக்கள் காண்பதற்காக சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. மெரினா கடற்கரையில், விவேகானந்தர் இல்லத்துக்கு எதிரே உள்ள பகுதியில் 18 அடி உயரம், 32 அடி அகலம் கொண்ட மிகப்பெரிய எல்இடி திரைஅமைக்கப்பட்டது. இந்த திரையில் நேற்று பிற்பகலில் கிரிக்கெட் போட்டி ஒளிபரப்பு செய்யப்பட்டது. இதுபோல, பெசன்ட்நகர் கடற்கரையிலும் பெரிய எல்இடி திரை அமைத்து, கிரிக்கெட் போட்டி ஒளிபரப்பப்பட்டது. இந்த இரு இடங்களில் ஆயிரக்கணக்கான ரசிகர்கள்நேற்று பிற்பகலில் குவிந்தனர்.

விளையாடும் போட்டியை காண சென்னை மெரினா கடற்கரையில்
பெரிய டிஜிட்டல் திரை அமைக்கப்பட்டது.
ஆயிரக்கணக்கான ரசிகர்கள் கடற்கரைமணலில் அமர்ந்து கிரிக்கெட் போட்டியை பார்த்து ரசித்தனர். இந்தியஅணி வீரர்கள் ஒவ்வொரு ரன்களை எடுக்கும் போதும், கரகோஷம் எழுப்பி உற்சாகத்தை வெளிப்படுத்தினர். இதுதவிர, சென்னைதீவுத்திடலிலும் பெரிய திரையில்கிரிக்கெட் போட்டி ஒளிபரப்பு செய்யப்பட்டது. இங்கும் ரசிகர்கள் குவிந்திருந்தனர். இந்த இடங்களில் அசம்பாவித சம்பவங்கள் எதுவும் நடைபெறாமல் தடுக்க போலீஸார் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டனர். இதனிடையே, மெரினா கடற்கரையில் பெரிய எல்இடி திரையில் கிரிக்கெட் போட்டி ஒளிபரப்பு செய்யப்பட்டது. இந்த எல்இடி திரைபாகங்களை பிரித்து கொண்டு செல்லும் பெட்டிகள், மெரினா கடற்கரையின் மாற்றுத் திறனாளிகள் செல்லும் பாதையில் வைக்கப்பட்டிருந்தன. இதனால், அந்த பாதை வழியாக கடற்கரைக்கு சக்கர நாற்காலியில் சென்றபோது சிரமத்தை சந்தித்ததாக மாற்றுத் திறனாளிகள் குற்றம்சாட்டினர்.