திருப்புவனம்: வைகை அணையில் இருந்து கிருதுமால் நதியில் பாசன தேவைக்காக தண்ணீர் திறக்க வேண்டும் என சிவகங்கை, விருதுநகர், ராமநாதபுர மாவட்ட விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.
மதுரை மாவட்டம் நாகமலை புதுக்கோட்டையில் இருந்து வரும் கிருதுமால் நதி தண்ணீரை நம்பி மூன்று மாவட்ட விவசாயிகள் உள்ளனர். மதுரை நகரின் மொத்த சாக்கடையும் கிருதுமால் நதியில் விடப்பட்டதால் மதுரை விரகனுார் மதகு அணையில் இருந்து வெள்ளக்கால்வாய் வெட்டப்பட்டு கிருதுமால் நதியில் இணைக்கப்பட்டு தண்ணீர் திறக்கப்படுகிறது.
80கி.மீ., துாரமுள்ள இந்த நதியை 2013ல் ரூ.93 கோடி உலக வங்கி நிதியுதவியுடன் பொதுப்பணித்துறை தூர் வாரியது. இதன் மூலம் 15 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் என்றும் 1 லட்சம் விவசாயிகள் பயன்பெறுவார்கள் என்றும் சிவகங்கை மாவட்டத்தில் 11 கண்மாய், விருதுநகர் மாவட்டத்தில் 31 கண்மாய், ராமநாதபுர மாவட்டத்தில் 3 கண்மாய்கள் பயன்பெறும் என அதிகாரிகள் தெரிவித்தனர். அதன்பின் பராமரிப்பு பணி மேற்கொள்ளப்படாததால் கால்வாயில் ஆங்காங்கே கருவேல மரங்களும், நாணல்களும் வளர்ந்து தண்ணீர் செல்வதற்கு இடையூறாக உள்ளது.
வடகிழக்கு பருவமழையால் மழை நீர் கூட கிருதுமால் நதியில் செல்லவில்லை. தண்ணீர் விரைவாக செல்வதற்கு வசதியாக மதுரை விரகனுார் மதகு அணையில் இருந்து 5.5கி.மீ., துாரத்திற்கு 55 அடி அகலத்தில் சிமென்ட் தொட்டி ரூ.3 கோடி செலவில் கட்டினர். அதிலும் கருவேல மரங்கள் வளர்ந்ததால் கால்வாய் முற்றிலும் சேதமடைந்து விவசாயமே கேள்விக்குறியாகிவிட்டது. கிருதுமால் நதியை முழுமையாக துார்வாரி பராமரிக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். கடும் வறட்சியில் தவிக்கும் விருதுநகர், சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்ட விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டும். கிருதுமால் நதி மூலம் சிவகங்கை மாவட்டத்தில் பாசன வசதி கிடைப்பதுடன் குடிநீர் தேவையும் பூர்த்தியாகும். நதியில் தண்ணீர் வராததால் ஆழ்துளை கிணறுகளில் நீர்மட்டம் குறைந்துவிட்டது. எனவே கிருதுமால் நதியில் தண்ணீர் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
////
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
