ராஜபாளையம்: விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே ரூ.3.50 லட்சத்துக்கு விற்கப்பட்ட, ஒரு மாத ஆண் குழந்தையை மீட்ட போலீஸார், தாய் உள்ளிட்ட 4 பெண்களைக் கைது செய்தனர். ராஜபாளையம் அருகேயுள்ள சேத்தூர் ஜீவா நகரைச் சேர்ந்தமுனியசாமி-முத்துசுடலி தம்பதிக்கு 4 வயதில் மகன் உள்ளார். கருத்து வேறுபாடால் இருவரும் பிரிந்துவிட்டனர். இந்நிலையில், மீண்டும் கர்ப்பமான முத்துசுடலிக்கு கடந்த அக். 18-ல் ராஜபாளையம் அரசு மகப்பேறு மருத்துவமனையில் ஆண் குழந்தை பிறந்தது. சில நாட்களுக்கு முன்பு முத்துசுடலி, சேத்தூர் ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு சிகிச்சைக்குச் சென்றார். அப்போது, செவிலியர்கள் குழந்தை குறித்து கேட்டபோது, முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்தார். இதனால் சந்தேகமடைந்த செவிலியர்கள், மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலகுக்கு தகவல் தெரிவித்தனர்.
இதுகுறித்து குழந்தை பாதுகாப்பு அலுவலர் திருப்பதி விசாரித்தபோது, முத்துசுடலி தனது குழந்தையை அக்.25-ம் தேதி முகவூரைச்சேர்ந்த ராஜேஸ்வரி (50), தென்காசி மாவட்டம் பெரும்பத்தூரைச் சேர்ந்த ஜெயபால்(46), ஈரோடுமாவட்டம் வேட்டுவபாளையத்தைச் சேர்ந்த ரேவதி(38) ஆகியோர் மூலம், ரூ.3.50 லட்சத்துக்கு விற்பனை செய்தது தெரியவந்தது. தற்போது அந்தக் குழந்தை ஈரோடு மாணிக்கம்பாளையத்தை சேர்ந்த அசினா(35) என்பவரிடம் இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது. இதுகுறித்த புகாரில் சேத்தூர் போலீஸார் வழக்கு பதிவு செய்து, முத்துசுடலி (36), ராஜேஸ்வரி, ரேவதி, அசினா ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும், குழந்தையை மீட்ட அதிகாரிகள், விருதுநகர் காப்பகத்தில் ஒப்படைத்தனர்.
குழந்தையை விற்ற வழக்கு: இந்த வழக்கில் தொடர்புடைய தென்காசி மாவட்டத்தைச் சேர்ந்த ஜெயபாலைத் தேடி வருகின்றனர். மேலும், வேறு யாருக்கும் இதில் தொடர்பு உள்ளதா என்பது குறித்தும் போலீஸார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். கைது செய்யப்பட்ட ரேவதி, அசினா ஆகியோர் மீது நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் காவல்நிலையத்தில் 2019-ம் ஆண்டில்சட்டவிரோதமாக குழந்தையை விற்றது தொடர்பான வழக்கு நிலுவையில் இருப்பதாகவும் போலீஸார் தெரிவித்தனர்.