
நான்குனேரி ஜெராக்ஸ் கடை மீது மர்ம நபர்கள் நாட்டுவெடிகுண்டு வீசியதால் சேதமடைந்த பகுதியை பார்வையிடும் காவல்துறை அதிகாரி.
களக்காடு: நான்குனேரியில் தனியார் தொலைக்காட்சி செய்தியாளரின் ஜெராக்ஸ் கடைக்குள் குண்டு வீசப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருநெல்வேலி மாவட்டம், நான்குனேரி அருகேயுள்ள மறுகால்குறிச்சியைச் சேர்ந்தவர் வானுமாமலை (45). இவர் தனியார் தொலைக்காட்சியில் நான்குனேரி வட்டம் செய்தியாளராக பணியாற்றி வருகிறார். இவர் நான்குனேரி வட்டாட்சியர் அலுவலகம் அருகே ஜெராக்ஸ் கடை நடத்தி வருகிறார்.
இந்நிலையில், செவ்வாய்க்கிழமை வழக்கம்போல வானுமாமலை மற்றும் அவரது மனைவி இருவரும் கடையை திறந்து வைத்து பணி செய்து கொண்டிருந்தனராம். அப்போது, திடீரென சிலர் கடைக்குள் நாட்டு வெடி குண்டுகளை வீசிவிட்டு தப்பியோடிவிட்டனராம்.
இதில் ஒரு குண்டு கடையின் முன்பகுதியில் வைத்திருந்த பெயர்ப்பலகையில் விழுந்து பலமாக வெடித்துள்ளது. மீதமுள்ள குண்டுகள் வெடிக்கவில்லையாம். இதில் யாருக்கும் எவ்வித காயமும் ஏற்படவில்லை.
இதையும் படிக்க: ‘வெறும் 6 பேருக்காக விமானத்தை இயக்க முடியாது’ – பயணிகளை இறக்கிவிட்ட இண்டிகோ!
முன்விரோதம் காரணமாக யாரேனும் வெடிகுண்டுகளை வீசியிருக்கலாம் என்பது குறித்து நான்குனேரி காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
செய்திகள் உடனுக்குடன்… வாட்ஸ்ஆப் சேனலில் ‘தினமணி’யைப் பின்தொடர…