சிவகங்கை: சிவகங்கையில் ஆதிதிராவிடர் மாணவர்களுக்கு ஒதுக்கிய நிதியில் ரூ.2.35 கோடி கையாடல் செய்ததாக பெண் வருவாய் ஆய்வாளர்,கணவருடன் கைது செய்யப்பட்டார்.
தமிழகத்தில் ஆதிதிராவிடர் நல விடுதியில் தங்கியுள்ள பள்ளி மாணவர்களுக்கு எண்ணெய்,சோப்பு, சிகைக்காய், சலவைத்தூள் வாங்க மாதம் ரூ.100-ம்,கல்லூரி மாணவர்களுக்கு மாதம்ரூ.150-ம் வழங்கப்படுகிறது.
சிவகங்கை மாவட்டத்தில் இந்த தொகை 2017-ம் ஆண்டு முதல் முறையாக வழங்கவில்லை என ஆதிதிராவிடர் நலக் குழு உறுப்பினர் பூமிநாதன், மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித்திடம் புகார் தெரிவித்தார்.
ஆட்சியர் உத்தரவின் பேரில் அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இதில், போலி கணக்குகளை உருவாக்கி ஆதிதிராவிடர் மாணவர்களுக்கு ஒதுக்கிய நிதியை மோசடி செய்தது தெரியவந்தது. இதையடுத்து, மாவட்ட ஆதிதிராவிட நலத் துறை மூத்த வருவாய் ஆய்வாளர் சீதாபிரியா தற்காலிகப் பணிநீக்கம் செய்யப்பட்டார்.
இந்நிலையில், 2017 முதல் 2023-ம் ஆண்டு வரை ஆதிதிராவிடர் மாணவர்களுக்கு ஒதுக்கிய நிதி ரூ.9 லட்சத்தை சீதாபிரியா கையாடல் செய்ததாகவும், அதில் அக்டோபர் மாதம் ரூ.5 லட்சத்தை திருப்பிச் செலுத்தியதாகவும், மீதி ரூ.4 லட்சத்தை செலுத்தாமல் ஏமாற்றி விட்டதாகவும் ஆதிதிராவிடர் நல தனி வட்டாட்சியர் உமாமகேஸ்வரி, சிவகங்கை நகர் குற்றப் பிரிவு போலீஸில் புகார் கொடுத்தார்.
விசாரணையில், ஆதிதிராவிடர் மாணவர்களுக்கு ஒதுக்கிய நிதியை சீதாபிரியா, தனது கணவர்ராம்குமார் (45) வங்கிக் கணக்குக்கு மாற்றி முறைகேடு செய்ததும், 2017 முதல் 2023 வரைரூ.2.35 கோடி வரை கையாடல் செய்ததும் தெரியவந்தது.
இதையடுத்து, இந்த வழக்கு சிவகங்கை மாவட்ட குற்றப் பிரிவுக்கு மாற்றப்பட்டது. குற்றப் பிரிவு போலீஸார் வழக்கு பதிவு செய்து, சீதாபிரியா, ராம்குமார் ஆகியோரைக் கைது செய்தனர்.