பூந்தமல்லி: பூந்தமல்லி அருகே பாதுகாப்பு இல்லாமல் லாரியில் ஏற்றிச் செல்லப்பட்ட 40 எருமை மாடுகள் பறிமுதல் செய்யப்பட்டன. இது தொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டனர். ஆந்திர மாநிலத்திலிருந்து, கேரள மாநிலத்துக்கு 40 எருமை மாடுகளுடன் லாரி ஒன்று நேற்று முன்தினம் இரவு திருவள்ளூர் மாவட்ட பகுதி வழியாகச் சென்று கொண்டிருந்தது. மாடுகளைத் துன்புறுத்தும் வகையில் போதிய பாதுகாப்பில்லாமல் சென்று கொண்டிருந்த அந்த வாகனம் குறித்து வந்த புகாரின் அடிப்படையில் இந்திய விலங்குகள் நல வாரியத்தினர், பூந்தமல்லி அருகே வண்டலூர்-மீஞ்சூர் வெளிவட்டச் சாலையில் வந்து கொண்டிருந்த லாரியை நிறுத்தி சோதனை செய்தனர்.
அப்போது, அந்த லாரியில் போதிய பாதுகாப்பு இல்லாமல் 40 எருமை மாடுகள் அடைத்து அழைத்து வரப்பட்டிருப்பது தெரியவந்தது. ஆகவே, அம்மாடுகளை லாரியுடன் விலங்குகள் நல வாரியத்தினர் பறிமுதல் செய்து, வெள்ளவேடு போலீஸாரிடம் ஒப்படைத்தனர்.
4 பேர் கைது: இதுகுறித்து, மிருக வதை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்த வெள்ளவேடு போலீஸார், பறிமுதல் செய்யப்பட்ட அந்த மாடுகளை காஞ்சிபுரம் பகுதியில் உள்ள கோசாலையில் ஒப்படைத்தனர். மேலும், இந்த வழக்கு தொடர்பாக ஆந்திராவைச் சேர்ந்த லாரி ஓட்டுநரான சீனிவாசன்(45), ரோசி(40), கேரளாவைச் சேர்ந்த ராஜேந்திரன்(46), பொள்ளாச்சியைச் சேர்ந்த சதாசிவம்(54) ஆகிய 4 பேர் கைது செய்யப்பட்டனர். பின்னர்,அவர்கள் காவல் நிலைய பிணையில்விடுவிக்கப்பட்டனர்.