நாகர்கோவில்: குழந்தையின் வாயில் வலுக்கட்டாயமாக மதுவை ஊற்றி கொலை செய்த விவகாரத்தில், குழந்தையின் தாய் மற்றும் அவரது ஆண் நண்பர் கைது செய்யப்பட்டனர்.
கன்னியாகுமரி மாவட்டம் நித்திரவிளை அருகே உள்ள காஞ்சாம்புரத்தைச் சேர்ந்தவர் சினு. மீன் பிடி தொழிலாளி. இவரது மனைவி பிரபுஷா. இவர்களது ஒன்றரை வயது மகன் அரிஸ்டோ பியூலஸ். பிரபுஷாவுக்கும், காஞ்சாம்புரம் பகுதியைச் சேர்ந்த ஓட்டல் ஊழியர் சதாம் உசேன் என்பவருக்கும் நட்பு ஏற்பட்டுள்ளது.
இருவரும் குழந்தை அரிஸ்டோ பியூலசுடன் அஞ்சு கிராமம் மயிலாடியில் வசித்து வந்தனர். இந்நிலையில் கடந்த 16-ம் தேதி இரவு குழந்தை அரிஸ்டோ பியூலஸ் உடல் நலம் பாதிக்கப்பட்டதாக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால், சிறிது நேரத்தில் குழந்தை இறந்தது. குழந்தையின் உடலில் காயங்கள் இருந்தன.
இது குறித்து அஞ்சு கிராமம் போலீஸார் விசாரணை மேற்கொண்டனர். சதாம் உசேன், பிரபுஷாவிடம் விசாரணை நடத்தியதில், குழந்தையின் வாயில் மதுவை ஊற்றி, கம்பால் தாக்கியது தெரிய வந்தது. அவர்களின் நட்புக்கு இடையூறாக இருந்ததால் குழந்தையை தாக்கியுள்ளனர், என போலீஸார் தெரிவித்தனர். சதாம் உசேன், பிரபுஷா இருவரும் கைது செய்யப்பட்டனர்.