கடலூர்: சிதம்பரத்தில் தியேட்டரில் சினிமா பார்க்க வந்தவர்களை தாக்கிய திரையரங்கு ஊழியர்கள் 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
கடலூர் மாவட்டம் சிதம்பரம் தில்லை காளியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த சிரஞ்சீவி (29) மற்றும் அவரது அண்ணன்கள் பழனிசாமி, ராம ராஜன் மற்றும் அவர்களது குடும்பத்தினர் நவ. 16-ம் தேதி இரவு சிதம்பரத்தில் ஒரு தியேட்டருக்கு சினிமா பார்க்க சென்றனர். அப்போது திரையரங்கு ஊழியர்கள் சிரஞ்சீவியிடம் மது பாட்டில் உள்ளதா என சோதனை நடத்தியுள்ளனர்.
இதனால் ஏற்பட்ட வாக்கு வாதத்தில் திரையரங்கு ஊழியர்கள் அரவிந்தன், சுகந்தன், ராகுல், மாதவன் உள்ளிட்டோர் சேர்ந்து சிரஞ்சீவி மற்றும் அவரது அண்ணன் பழனிசாமி, ராமராஜன் ஆகியோரை இரும்பு கம்பி மற்றும் கட்டையால் தாக்கியுள்ளனர். இதில் படுகாயம் அடைந்த சிரஞ்சீவி, பழனிசாமி, ராம ராஜன் ஆகியோர் சிதம்பரம் அண்ணாமலை நகரில் உள்ள கடலூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரியில் சேர்க்கப்பட்டனர்.
இது குறித்து சிரஞ்சீவி அளித்த புகாரின் பேரில் சிதம்பரம் நகர போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதுதொடர்பாக நேற்று முன்தினம் இரவு திரையரங்கு ஊழியர்களான சிதம்பரம் அம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த சுகுந்தன் (22), குமராட்சி அருகே உள்விளத்தூர் கிராமத்தைச் சேர்ந்த ராகுல் (22), சிவபுரி வடபாதியைச் சேர்ந்த அரவிந்தன் (38), புளியங்குடி இந்திரா நகரைச் சேர்ந்த மாதவன் (22) ஆகிய 4 பேரை போலீஸார் கைது செய்தனர்.