சென்னை: கன்னியாகுமரி மாவட்டத்தில் நடைபெற்ற இரட்டை கொலை வழக்கில் 12 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த பிரபல ரவுடி சென்னையில் துப்பாக்கி முனையில் கைது செய்யப்பட்டுள்ளார். கன்னியாகுமரி மாவட்டம், சுசீந்திரம் தேரூரைச் சேர்ந்த வன ஊழியர் ஆறுமுகம். இவரது மனைவி யோகேஸ்வரி. இவர்கள் கடந்த 2011-ம் ஆண்டு நவ. 10-ம் தேதி இரவு திருமண நிகழ்ச்சி ஒன்றுக்கு சென்று விட்டு இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பிக் கொண்டிருந்தனர். அதே பகுதி தேரூர் சாலையில் இசக்கியம்மன் கோயில் அருகே சென்று கொண்டிருந்தபோது அவர்களை வழி மறித்த கும்பல், துப்பாக்கியால் சுட்டு இருவரையும் கொலை செய்தது.
இந்த இரட்டை கொலை தொடர்பாக அதிமுக பிரமுகர், ரவுடி முண்டக்கண் மோகன் ஆகியோர் அடுத்தடுத்து கைது செய்யப்பட்டனர். சொத்து விவகாரத்தில் இக்கொலை நடைபெற்றிருந்தது தெரியவந்தது. இக்கொலை தொடர்பில் முக்கிய குற்றவாளியாக பிரபல ரவுடியான சதாசிவம் (54) என்பவர் இருந்துள்ளார். மேலும், கொலை செய்வதற்காக இவர் துப்பாக்கியையும் விநியோகம் செய்துள்ளார். இதையடுத்து, இவரை கன்னியாகுமரி மாவட்ட போலீஸார் தனிப்படை அமைத்து தேடினர். இதை அறிந்த ரவுடி சதாசிவம் தலைமறைவானார்.
தொடர்ந்து சதாசிவம் தலைமறைவாக இருந்ததால் இக்கொலை வழக்கு சட்டம் ஒழுங்கு போலீஸாரிடமிருந்து கன்னியாகுமரி மாவட்ட சிபிசிஐடி பிரிவு போலீஸாரிடம் ஒப்படைக்கப்பட்டது. இதையடுத்து அப்பிரிவு போலீஸார் தலைமறைவாக இருந்த சதாசிவத்தை தனிப்படை அமைத்து தொடர்ந்து தேடி வந்தனர். ஆனால், அவர் சிக்கவில்லை. இருப்பினும், அவரின் ஆயுத சப்ளை தொடர்ந்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில், சுசீந்திரம் இரட்டை கொலை வழக்கில் தொடர்புடைய ரவுடி சதாசிவம் சென்னை சாலிகிராமத்தில் தங்கி, ரியல் எஸ்டேட் மற்றும் பல்வேறு தொழில்கள் செய்து தொழில் அதிபராக வலம் வந்ததை தனிப்படை போலீஸார் கண்டறிந்தனர். இதையடுத்து, அவரை நேற்று முன்தினம் இரவு துப்பாக்கி முனையில் கைது செய்தனர். பின்னர், அவரை சென்னையில் இருந்து கன்னியாகுமரி மாவட்டத்துக்கு அழைத்துச் சென்றனர். இரட்டைக் கொலை வழக்கில் தொடர்புடைய ரவுடி 12 ஆண்டுகளாக பதுங்கி ரியல் எஸ்டேட் அதிபராக வலம் வந்த சம்பவம் சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.