சென்னை: நடிகை த்ரிஷா உள்ளிட்ட நடிகைகள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய நடிகர் மன்சூர் அலிகானுக்கு தென்னிந்திய நடிகர் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.

இது குறித்து நடிகர் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது: மூத்த நடிகர் மன்சூர் அலிகான் நடிகைகள் பற்றி ஒரு பேட்டியில் பேசிய வீடியோவைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தோம். திரைத்துறையில் பெண்கள் நுழைவதும் சாதிப்பதும் இன்னமும் சவாலாகவே இருக்கும் இன்றைய சூழலில், பல்வேறு சவால்களை எதிர்கொண்டு சாதித்து வரும் நடிகைகளைப் பற்றி இப்படி மோசமான கருத்துகளைத் தெரிவித்தது என்பது வன்மையாகக் கண்டிக்கப்பட வேண்டிய ஒன்று. தென்னிந்திய நடிகர் சங்கம் இந்த விவகாரத்தில் பாதிக்கப்பட்ட நடிகைகள் உடன் நிற்கும்.

சக நடிகர்களைப் பற்றி நகைச்சுவை என்ற பெயரில் தரக்குறைவாக பேசிய மன்சூர் அலிகானை தென்னிந்திய நடிகர் சங்கம் வன்மையாகக் கண்டிக்கிறது. அதிர்ச்சியுறும் அவரது இப்போக்கு கவலையையும், கோபத்தையும் உண்டாக்குகிறது. ஒரு நடிகராக, இயக்குனராக, தயாரிப்பாளராக பொறுப்புணர்ந்து பேச அவர் கற்றுக்கொள்ள வேண்டும்.

மக்களால் கவனிக்கப்படும் பிரபலங்களாக இருக்கும்போது, தான் உதிர்க்கும் கருத்துகளும், வார்த்தைகளும் கண்ணியமாக இருக்க வேண்டும் என்ற அடிப்படை உணர்வின்றி அவர் பேசியது மிகவும் தவறாகும். எந்த ஊடகம் முன்பு அவர் பேசினாரோ அந்த ஊடகம் முன்பு உண்மை மனதுடன் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டுகிறோம்.

இக்கீழ்செயல் காரணமாய்த் தன் தவறு உணர்ந்து, மனம் வருந்தி, உண்மையாக பொது மன்னிப்பு கூறும் வரை அவரை சங்கத்திலிருந்து ஏன் தற்காலிகமாக நீக்கம் செய்யக்கூடாது என்று தென்னிந்திய நடிகர் சங்கம் கருதுகிறது. இந்நிகழ்வினை உதாரணித்து, வரும் காலங்களில் மற்ற நடிகர்களும் பொதுவெளியில் கருத்துகள் பகிரும்போது கவனமாய் இருக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொள்கிறோம்.

இந்த தனி நபர் விமர்சனம் மட்டும் அல்லாது, வெகு நாட்களாக பொது ஊடகங்களில் மறைமுகமாகவும் நேரடியாகவும் பல பொய்க் கதைகளையும் திருத்த நிகழ்வுகளையும் பொழுதுபோக்கு என்ற பெயரில் பரப்பி பரபரப்பை உண்டாக்கிக் கொள்கின்றனர். இதில் சோகமும் கோபமும், இத்துறை சார்ந்தவர்களே அவற்றைத் தொகுத்து வழங்குவதுதான். மென்மையுள்ளம் படைத்தவர்கள் என்பதனால் ஒவ்வொரு முறையும் நடிக சமுதாயத்தினர் இலக்காக்கப்படுவது இனியும் நிகழாது. தீவிரமான எதிர்வினைகள் சாத்வீகமான முறையில் தொடுக்கப்படும் என்பதையும் தென்னிந்திய நடிகர் சங்கம் இந்தச் சூழலில் தெரிவித்துக் கொள்கிறது”. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: