சென்னை: சென்னை விருகம்பாக்கம் அபுசாலி தெருவை சேர்ந்தவர் பிரேமலதா (44). இவர் அதே பகுதியில் கம்ப்யூட்டர், லேப் டாப்களை வாடகைக்கு விடும் தொழில் செய்து வருகிறார்.
இந்நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு பல்லாவரம் சங்கர் நகரை சேர்ந்த தினேஷ்(27) என்பவர், பிரேமலதாவிடம் சென்று, தான் அனகாபுத்தூரில் கடை நடத்தி வருவதாகவும், தனக்கு 20 லேப் டாப்கள் வாடகைக்கு வேண்டும் என்றும் கேட்டுள்ளார்.
அதற்கு முன்பணமாக குறிப்பிட்ட தொகையை செலுத்தி, லேப் டாப்களை பெற்றுக்கொண்டு, அதற்கான வாடகையையும் சரியாக செலுத்தியுள்ளார். இந்நிலையில், கடந்த 2 மாதங்களுக்கு முன்பு மீண்டும் பிரேம லதாவின் கடைக்கு வந்த தினேஷ், தனக்கு பெரிய ஆர்டர் ஒன்று வந்துள்ளது என்றும், 521 லேப் டாப்கள் வாடகைக்கு வேண்டும் என்றும் கேட்டுள்ளார்.
இத்தனை லேப் டாப்களுக்கு மாத வாடகை ரூ.27 லட்சம் ஆகும் என பிரேமலதா கூறியுள்ளார். அதனை ஒப்புக்கொண்டு, ரூ.3.5 கோடி மதிப்புள்ள 521 லேப்டாப்களை தினேஷ் வாங்கி சென்றுள்ளார். அதற்கான வாடகையை முதல் மாதம் சரியாக கொடுத்த தினேஷ், அடுத்த மாத வாடகையை பிரேமலதாவிடம் கொடுக்காமல் இருந்துள்ளார்.
இதற்கிடையில், பிரேமலதாவின் கடைக்கு வந்த ஒருவர், அனகாபுத்தூரில் குறைந்த விலையில், லேப்டாப்கள் விற்பனைக்கு கிடைக்கிறது என்றும், தங்களுக்கு தேவைப்பட்டால் அங்கு சென்றுவாங்கி கொள்ளுமாறும் கூறியுள்ளார். மேலும், அவர் வாங்கி வந்த லேப் டாப்களை வாங்கி பார்த்த பிரேமலதா, அது தன்னிடம் இருந்து வாடகைக்கு எடுத்துச் சென்ற லேப்டாப் என்பதை அறிந்தார்.
இது குறித்து விசாரித்த போது தான், தன்னிடம் இருந்து லேப் டாப்களை வாடகை எடுத்து, தினேஷ் குறைந்த விலையில் விற்பனை செய்ததும், தான் ஏமாற்றப்பட்டதையும் பிரேமலதா உணர்ந்தார். அவர் அளித்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த போலீஸார், தினேஷை கைது செய்து, அவரிடம் இருந்து இதுவரை 312 லேப் டாப்களை பறிமுதல் செய்துள்ளனர்.