சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் ஏற்பட்ட பல்வேறு குளறுபடிகளையடுத்து, 2013-ல் அந்தப் பல்கலைக்கழகத்தை அரசுக் கட்டுப்பாட்டில் கொண்டுவந்தார் அன்றைய முதல்வர் ஜெயலலிதா. முன்னதாக அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் ஏற்பட்ட நிதிச் சிக்கலையடுத்து, 2012-ம் ஆண்டில் அரசு முதன்மைச் செயலாளரான சிவதாஸ் மீனா, பல்கலைக்கழக தனி அலுவலராக நியமிக்கப்பட்டிருந்தார். அவர் அளித்த அறிக்கையின் அடிப்படையிலேயே, அண்ணாமலை பல்கலைக்கழகம் அரசுக் கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டது. அதன் பிறகு பல்கலைக்கழகத்தைச் சீர்படுத்துவது தொடர்பாக மற்றொரு அறிக்கையையும் அவர் சமர்ப்பித்தார். அதில் அதிக எண்ணிக்கையில் பேராசிரியர்களும், ஊழியர்களும் இருப்பதால், அவர்களைப் பிரித்து வெவ்வேறு இடங்களுக்கு அனுப்பினால், நிதிச்சுமை குறையும் என்று பரிந்துரைத்தார். இதன்படி அடுத்தடுத்த ஆண்டுகளில் அண்ணாமலை பல்கலைக்கழகப் பேராசிரியர்கள், உதவிப் பேராசிரியர்கள், அலுவலக உதவியாளர்கள், அலுவலர்கள் என அனைவரும் மாநிலம் முழுவதுமுள்ள பிற கல்லூரிகள், அரசு அலுவலகங்களுக்குப் பணி நிரவல் செய்யப்பட்டனர்.

ஜெயலலிதா

அதன் பிறகு தணிக்கைக் குழு தனது ஆய்வை மேற்கொண்டது. அதில், உரிய கல்வியே இல்லாமல் சிலர் பணியில் இருந்தது தெரியவந்தது. இது தொடர்பாக சிண்டிகேட் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, நடவடிக்கை எடுக்குமாறு உயர்கல்வித்துறைக்குப் பரிந்துரைக்கப்பட்டது. அதன்படி கணினி அறிவியல், பொருளாதாரம், வரலாறு, மேலாண்மைதுறைகளைச் சேர்ந்த 56 உதவிப் பேராசிரியர்களைப் பணிநீக்கம் செய்து பல்கலைக்கழக நிர்வாகம் உத்தரவு பிறப்பித்திருக்கிறது. எந்த அடிப்படையில் இவர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டனர் என்பது குறித்து அண்ணாமலை பல்கலைக்கழக துணைவேந்தர் கதிரேசனிடம் கேட்டோம். “பணிநீக்கம் செய்யப்பட்ட 56 பேரும் 2009-க்கு முன்பே உதவிப் பேராசிரியர் பணியில் இணைந்தவர்கள். பேராசிரியர்கள், உதவிப் பேராசிரியர்கள் பணிகளுக்கு யு.ஜி.சி, ஏ.ஐ.டி.சி பல்வேறு விதிகளை வகுத்திருக்கின்றன. அந்த விதிகளைப் பின்பற்றி, தகுதியுடையவர்களை மட்டுமே நியமிக்க வேண்டும்.

அண்ணாமலை பல்கலைக்கழகம்

இது 2013-ல் அரசால் அமைக்கப்பட்ட தணிக்கைக் குழுவின் ஆய்வில் தெரியவந்தது. உதாரணத்துக்கு எம்.பி.ஏ-வில் முதல் கிரேடில் தேர்ச்சி பெற்றவர்கள் பணி நியமனம் செய்யப்படலாம் என, யு.ஜி.சி விதி இருக்கிறது என்றால், இரண்டாம் நிலை, மூன்றாம் நிலையில் தேர்ச்சி பெற்றவர்கள் நியமிக்கப்பட்டால், அந்த நியமனம் செல்லத்தக்கதல்ல. அதேபோல கணினி அறிவியல் படிக்காமல் வேறு துறையில் பட்டம் பெற்றவர்கள், கணினி அறிவியல்துறை உதவிப் பேராசியராக நியமிக்கப்பட்டது போன்ற விதிமீறல்கள் தணிக்கைக் குழுவால் கண்டுபிடிக்கப்பட்டதன் அடிப்படையில், இந்தப் பணிநீக்கம் நடந்திருக்கிறது. தற்போது அந்த 56 பேரில் 18 பேர் மட்டுமே அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் இப்போதும் பணியாற்றி வருகின்றனர். 38 பேர் பணி நிரவல் செய்யப்பட்டு, பல்வேறு கல்லூரிகளில் பணியாற்றி வருகின்றனர்” என்றார்.

அண்ணாமலை பல்கலைக்கழகம்

இது தொடர்பாக அண்ணாமலை பல்கலைக்கழக வட்டாரத்திலும் விசாரித்தோம். “அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் மட்டுமல்ல, தனியார் கல்லூரிகளில் பெரும்பாலும் யு.ஜி.சி விதிகளைப் பின்பற்றி உதவிப் பேராசிரியர்கள் நியமிக்கப்படுவதில்லை. முதுகலைப் பட்டம் பெற்றிருந்தாலே வேலை கொடுக்கப்பட்டு விடுகிறது என்பதுதான் பரவலான எதார்த்தம். இதற்கு இரண்டு முக்கியக் காரணங்கள் இருக்கின்றன. சிபாரிசுகள் அடிப்படையில் சிலரை நியமிக்கலாம். அதேபோல தனியார் கல்லூரிகளைப் பொறுத்தவரையில் குறைந்த ஊதியத்தில் உதவிப் பேராசிரியர்களை நியமித்து விடுவார்கள். அதனால் யு.ஜி.சி விதிகளையெல்லாம் பார்த்துக் கொண்டிருக்க மாட்டார்கள். அண்ணாமலை பல்கலைக்கழகம் ஜெயலலிதா ஆட்சிக்காலத்தில் அரசுடைமையாக்கப்பட்டதால், தணிக்கைக் குழு ஆய்வு செய்ய வேண்டிய சூழல் உருவாகி, தற்போது நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது” என்கின்றனர்.

Source link

By Admin S

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: