தஞ்சாவூர்: தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் 7 அடி உயர திருக்குறள் புத்தகம் ஞாயிற்றுக்கிழமை வெளியிடப்பட்டது.

தமிழ் பல்கலைக்கழக அறிவியல் தமிழ் மற்றும் தமிழ் வளர்ச்சித் துறை, பெரம்பலூர் அகழ் கலை இலக்கிய மன்றம் சார்பில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் இப்புத்தகத்தை பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா வெளியிட்டு பேசியது:

பெரம்பலூர் அகழ் கலை இலக்கிய மன்ற நிறுவனர் செ. வினோதினி கரோனா காலத்திலிருந்து 133 எழுத்தாளர்களையும் ஒன்று திரட்டி, இந்த நூலை தொகுத்துள்ளார். இதில் 80 பெண்கள், 7 சிறுமிகள், 38 ஆண்கள், 8 சிறுவர்கள் ஆகியோர் எழுதியுள்ளனர். இந்த 133 பேரையும் ஒன்றாக இணைத்து இந்நூல் தொகுக்கப்பட்டிருப்பது பெரிய சாதனை என்றார் சாலமன் பாப்பையா.

தமிழக அரசின் தமிழ் வளர்ச்சித் துறை இயக்குநர் அவ்வை ந. அருள் பேசியது: 

ஒவ்வொரு குறளின் பொருளைப் புரிந்து கொண்டு அதற்கேற்ப கதைகளை உருவாக்கி இந்நூல் படைக்கப்பட்டிருப்பது மிகவும் சிறப்புக்குரியது. இந்த சாதனையால் இந்தியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ்க்கு கொண்டு செல்லபட்டதுபோல, வேர்ல்ட் புக் ஆஃப் ரெகார்ட்ஸ்க்கும் கொண்டு செல்ல வேண்டும் என்றார் அவர்.

இந்நிகழ்ச்சிக்கு தலைமை வகித்த தமிழ்ப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் வி. திருவள்ளுவன் பேசுகையில், இந்த நூலை ஒலி, ஒளி வடிவமாக மாற்றி உலகத் தமிழர்களுக்கு கொண்டு சேர்க்கப்படும் என்றார் அவர்.

பல்கலைக்கழக பதிவாளர் (பொ) சி. தியாகராஜன் பேசுகையில், மகாராஷ்டிரம், தில்லி உள்பட பல்வேறு மாநிலங்கள், ஒன்றியங்கள், மாவட்டங்களைச் சேர்ந்த 133 எழுத்தாளர்களை ஒருங்கிணைத்து, ஒவ்வொரு திருக்குறளுக்கும் கதைகள் உருவாக்கி இந்நூல் படைக்கப்பட்டுள்ளது. இதில் எழுதத் தெரிந்த சிறுவர், சிறுமிகள் முதல் வயது முதிர்ந்தவர்கள் வரை எழுதியுள்ளனர் என்றார் பதிவாளர்.

தமிழ்ப் பல்கலைக்கழக வளர்ச்சி தமிழ்ப் புலத் தலைவர் இரா. குறிஞ்சிவேந்தன், ஆல் இந்தியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ் வைத்தியநாதன் உள்ளிட்டோர் பேசினர்.

இதையும் படிக்க: 4 மாவட்டங்களில் இன்று மிக கனமழை பெய்ய வாய்ப்பு

முன்னதாக, பெரம்பலூர் அகழ் கலை இலக்கிய மன்ற நிறுவனர் செ. வினோதினி வரவேற்றார். நிறைவாக, அறிவியல் தமிழ் மற்றும் தமிழ் வளர்ச்சித் துறை இணைப் பேராசிரியர் இரா. இந்து நன்றி கூறினார்.

செய்திகள் உடனுக்குடன்… வாட்ஸ்ஆப் சேனலில் ‘தினமணி’யைப் பின்தொடர…

Source link

By Admin S

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: