திருச்சி: திருவாரூர் திமுக எம்எல்ஏ பூண்டி கலைவாணனின் சகோதர ரும், மறைந்த திமுக மாவட்டச் செயலாளருமான பூண்டி கலைச் செல்வன் நினைவு நாளுக்காக கொரடாச்சேரியில் வைக்கப்பட்டிருந்த பிளக்ஸ் பேனர் கடந்த 12-ம் தேதி சேதப்படுத்தப்பட்டதாக கூறப்படுகிறது.
இது தொடர்பாக கொரடாச்சேரி காந்தி காலனியைச் சேர்ந்த கணேசன் என்பவரை, கொரடாச்சேரி பேரூராட்சி திமுக செயலாளரும், பூண்டி கலைச்செல்வனின் மகனுமான பூண்டி கலைவேந்தன்(24) கண்டித்துள்ளார். அப்போது கணேசனுக்கு ஆதர வாக காந்தி காலனியைச் சேர்ந்த செந்தில்குமார் (32) என்பவர் கலைவேந்தனை தட்டிக் கேட்டுள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த கலைவேந்தன் மற்றும் அவரது ஆதரவாளர்கள் சூரியபாரதி (26), நவீன் (33), சரண்குமார் (20) ஆகியோர் கணேசன், செந்தில்குமாரைத் தாக்கியதாகக் கூறப்படுகிறது.
இது தொடர்பாக செந்தில்குமார் கொடுத்த புகாரின் பேரில் கலைவேந்தன் உள்ளிட்ட 4 பேர் மீது கொரடாச்சேரி காவல் நிலையத்தில் நவ.13-ம் தேதி வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இதேபோல, கலைவேந்தன் ஆதரவாளர் நவீன் கொடுத்த புகாரின் பேரில் கணேசன், செந்தில்குமார் ஆகியோர் மீதும் கொரடாச்சேரி போலீஸார் வழக்கு பதிவு செய்தனர். இந்நிலையில், கலைவேந்தன், சூரியபாரதி, நவீன் ஆகியோரை போலீஸார் நேற்று முன்தினம் கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். தலைமறைவான சரண் குமாரை தேடி வருகின்றனர்.