திருச்சி: திருச்சி மாநகராட்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பல புதிய கட்டிடங்கள் கட்டி முடிக்கப்பட்டு பல மாதங்கள் ஆகியும், முதல்வர் திறந்து வைப்பதற்காக காத்திருக்கின்றன. இவற்றை உடனடியாக திறந்து மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர். திருச்சி குதுப்பாபள்ளம், பாலக்கரை வேர்ஹவுஸ் ஆகிய பகுதிகளில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் தலா ரூ.2.5 கோடி மதிப்பில் நூலகத்துடன் கூடிய அறிவுசார் மையங்கள், மேலரண்சாலையில் ரூ.19.70 கோடி மதிப்பில் பன்னடுக்கு வணிக வளாகத்துடன் கூடிய வாகன நிறுத்துமிடம், சிந்தாமணி காளியம்மன் கோயில் பகுதியில் ரூ.6 கோடி மதிப்பில் காய்கறி சந்தையுடன் கூடிய வாகன நிறுத்துமிடம், காந்தி சந்தைபின்புறம் ரூ.13 கோடி மதிப்பில் மீன், இறைச்சிசந்தை, கீழரண் சாலையில் ரூ.6 கோடி மதிப்பில் சின்ன மார்க்கெட், சிந்தாமணி காளியம்மன் கோயில் தெருவில் ரூ.6 கோடி மதிப்பில் பன்னடுக்கு வாகன நிறுத்தம் ஆகியவை கட்டப்பட்டு பல மாதங்கள் ஆகியும் இதுவரை திறக்கப்படவில்லை.

கீழரண் சாலை மீன் மற்றும் இறைச்சி சந்தை.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலிக் காட்சி வாயிலாக இவற்றை திறந்து வைக்க உள்ளதால், அதற்காக காத்திருப்பதாக மாநகராட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டது. பலகோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டுள்ள இந்தக் கட்டிடங்களை சமூக விரோதிகள் முறையற்ற செயலுக்கு பயன்படுத்திவிடக் கூடாது என்பதற்காக அந்தந்த கட்டிடங்களின் கட்டுமான ஒப்பந்ததாரர்கள் தங்களது பொறுப்பில் காவலர்களை நியமித்து கட்டிடங்களை பாதுகாத்து வருகின்றனர். எனவே, இவற்றை உடனடியாக திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

நந்திகோயில் தெரு வாகன நிறுத்தும் இடம்.

இதுகுறித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த மாமன்ற உறுப்பினர் க.சுரேஷ் ‘இந்து தமிழ்’ நாளிதழிடம் கூறியது: ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் கட்டி முடிக்கப்பட்ட கட்டிடங்கள் திறக்கப்படாமல் உள்ளதால் மாநகராட்சிக்கு வருவாய் இழப்பு ஏற்படும். எனவே, பொதுமக்கள் நலன் கருதியும், மாநகராட்சியின் வருவாயை கருத்தில் கொண்டும், அவற்றை உடனடியாக திறந்து பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என்றார்.

கீழரண் சாலை சின்ன மார்க்கெட்.

இதுகுறித்து மாநகர மேயர் மு.அன்பழகனிடம் கேட்டபோது, அவர் கூறியது: ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் கட்டி முடிக்கப்பட்ட கட்டிடங்களை திறந்து வைக்கக் கோரி முதல்வரின் அலுவலகத்துக்கு உரிய ஆவணங்களுடன் கோரிக்கை வைத்துள்ளோம். விரைவில் முதல்வர் ஒப்புதல் வழங்கி இக்கட்டிடங்களை திறந்து வைத்து மக்கள் பயன்பாட்டுக்கு அர்ப்பணிப்பார் என்றார்.

காளியம்மன் கோயில் தெரு பன்னடுக்கு வாகன நிறுத்துமிடம்.

Source link

By Admin S

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: