ஓசூர்: சாலை, பள்ளி கட்டிடம், நூலகம், ஊராட்சி அலுவலகம், தெரு விளக்கு, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதியின்றி ஓசூர் அருகே பிஎஸ் திம்மசந்திரம் கிராம மக்கள் சிரமத்தைச் சந்தித்து வருகின்றனர். தமிழக எல்லையில் ஓசூர் அருகே பிஎஸ் திம்மசந்திரம் ஊராட்சி உள்ளது. இந்த ஊராட்சியில் தட்னப்பள்ளி, காந்திநகர், அமுதாகொண்டபள்ளி, சொன்னோபுரம், நாரேபுரம், சின்தலதொட்டி, சார்லதொட்டி, திம்மசந்திரம் ஆகிய கிராமங்கள் உள்ளன. இக்கிராமங்களில் குடிநீர், சாலை, தெரு விளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதியின்றி பொதுமக்கள் சிரமத்தைச் சந்தித்து வருகின்றனர்.
குறிப்பாக, பிஎஸ் திம்மசந்திரத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் 50-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். இப்பள்ளி வகுப்பறை கட்டிடம் கடந்த 40 ஆண்டுகளுக்கு முன்னர் கட்டப்பட்ட நிலையில், தற்போது பள்ளியின் சுவர்கள் வலுவிழந்துள்ளன. மேலும், கட்டிடத்தின் மேற்கூரை சோதமாகி மழை நீர் வகுப்பறைக்குள் விழும் நிலையுள்ளது. இதனால், மழை நேரங்களில் வகுப்பறைக்குள் உட்கார முடியாமல் மாணவர்கள் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர்.
இதேபோல, இக்கிராமத்தில் 2010-ம் ஆண்டு புதிய நூலகம் கட்டப்பட்டது. ஆனால், இதுவரையில் மக்கள் பயன்பாட்டுக்குத் திறக்கவில்லை. இதுதொடர்பாக அக்கிராமத்தைச் சேர்ந்த வருண் என்பவர் கூறியதாவது: பிஎஸ் திம்மசந்திரம் ஊராட்சிக்கு உட்பட்ட 8 கிராமங்களுக்கும் மக்கள் குறை கேட்க அதிகாரிகள் வருவதில்லை. ஊராட்சித் தலைவரும் மக்கள் குறைதீர்க்க நடவடிக்கை எடுப்பதில்லை. ஊராட்சி அலுவலகத்துக்கான புதிய கட்டிடப் பணி பாதியில் நிறுத்தப்பட்டுள்ளது. தெரு விளக்குகள் எரிவதில்லை. கழிவு நீர் கால்வாய் இல்லை.

ஊராட்சி அலுவலக புதிய கட்டிடம்.
இது போன்ற பிரச்சினைகளை யாரிடம் முறையிடுவது எனத் தெரியாமல் அடிப்படை வசதிக்காக நாங்கள் ஏங்கும் நிலையுள்ளது. இவ்வாறு அவர் கூறினார். இதுதொடர்பாக பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகள் கூறும்போது, “பிஎஸ் திம்மசந்திரம் தொடக்கப் பள்ளிக்கு புதிய கட்டிடம் கட்ட வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் ஆட்சியருக்கு கடிதம் அனுப்பியுள்ளோம். விரைவில் பள்ளிக்கு புதிய கட்டிடம் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்” என்றனர்.
ஊராட்சி அலுவலகத்துக்கு புதிய கட்டிடம்: திம்மசந்திரம் ஊராட்சித் தலைவர் சுசித்ரா முனிகிருஷ்ணன் கூறியதாவது: ஊராட்சிக்கு உட்பட்ட 8 கிராமங்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளைத் தொடர்ந்து செய்து கொடுத்து வருகிறேன். தெரு விளக்குகளை மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஊராட்சி அலுவலக கட்டிடம் சேதமாகி உள்ளதால், பயன்படுத்த முடியாத நிலையுள்ளது. ஊராட்சி அலுவலகத்துக்கு புதிய கட்டிடம் கட்டுவதால், தற்காலிகமாக அமுதகொண்டப்பள்ளில் ஊராட்சி அலுவலகம் செயல்பட்டு வருகிறது. ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி கட்டிடத்தை இடித்து அகற்றி விட்டு, புதிய கட்டிடம் கட்ட அதிகாரிகளிடம் மனு அளித்துள்ளேன். இவ்வாறு அவர் கூறினார்.