மண்டலகால மகரவிளக்கு பூஜைகளுக்காக சபரிமலை ஐயப்ப சுவாமி கோயிலில் திருநடை கடந்த 16-ம் தேதி மாலை 5 மணிக்குத் திறக்கப்பட்டது. சபரிமலை புதிய மேல்சாந்தி பி.என்.மகேஷ், மாளிகப்புறம் மேல்சாந்தி பி.ஜி.முரளி ஆகியோர் இருமுடி கட்டுடன் முதலில் பதினெட்டாம் படி ஏறிக் கோயிலுக்கு வந்தனர். அவர்களுக்குக் கொடிமரம் அருகே வரவேற்பு அளிக்கப்பட்டது. ஐயப்ப சுவாமி கோயில் மேல்சாந்தி பி.என்.மகேசுக்கு சன்னிதானம் முன்பு வைத்துக் குடத்தில் இருந்த தீர்த்தத்தை ஊற்றிக் கலசாபிஷேகம் நடத்தப்பட்டது. தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு புதிய மேல்சாந்தியின் கையைப் பிடித்துக் கோயிலுக்குள் அழைத்துச் சென்று ஐயப்ப சுவாமி மூல மந்திரத்தை உபதேசித்தார்.
அதுபோன்று மாளிகப்புறம் மேல்சாந்திக்கும் கலசாபிஷேகம் நடத்திப் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டது. அதன் பின்னர் மறுநாளில் இருந்து புதிய மேல்சாந்தி நடை திறந்து பூஜைகளை நடத்தி வருகிறார். தினமும் அதிகாலை 4 மணிக்கு ஐயப்பன் கோயில் நடை திறக்கப்படுகிறது. 4.05 மணி முதல் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுகின்றனர். மதியம் 1 மணிக்கு உச்சிகால பூஜை முடிந்து 1.30 மணிக்கு நடை சார்த்தப்படுகிறது. பின்னர் மாலை 4 மணிக்கு திருநடை திறக்கப்பட்டு இரவு 10.50 மணிக்கு ஹரிவராசனம் பாடப்படு 11 மணிக்கு நடை சார்த்தப்படுகிறது. அதிகாலை 4.15 மணி முதல் மதியன் 12 மணிவரை நெய்யபிஷேகம் நடத்தப்பட்டு வருகிறது.
இதற்கிடையே சபரிமலை புனித யாத்திரைச் செல்லும் பக்தர்களுக்கு உதவும் வகையில் கேரளா மாநில வனத்துறை சார்பில் ‘அய்யன் ஆப்’ என்ற புதிய மொபைல் அப்ளிகேசன் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

பெரியார் டைகர் ரிசர்வ் ஃபாரஸ் சார்பில் உருவாக்கப்படுள்ள அய்யன் ஆப் தமிழ், இந்தி, ஆங்கிலம், மலையாளம், தெலுங்கு, கன்னடம் ஆகிய 6 மொழிகளில் பயன்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. மொபைல் எண்ணை உபயோகித்து ஆப்பினுள் செல்லலாம். சபரிமலை கோயிலில் நடக்கும் பூஜைகள் உள்ளிட்ட நிகழ்வுகள் ஆப்பில் இடம்பெற்றுள்ளன. சபரிமலை செல்லும் வழிப்பாதைகள், வனத்தில் ஐயப்ப பக்தர்கள் செய்ய வேண்டியவை, செய்யக்கூடாதைவை குறித்த வழிகாட்டல்கள் போன்றவை இந்த ஆப்பில் இடம்பெற்றுள்ளன. அவசரக் கால உதவிக்காக தீயணைப்புத்துறை, வனத்துறை, காவல்துறை, சுகாதாரத்துறை, மின்சாரவாரியம், ரயில்வே விசாரணை, கேரள அரசு போக்குவரத்துத்துறை, மெடிக்கல் டிப்பார்ட்மெண்ட் ஆகியவற்றின் தொடர்பு எண்களும் இந்த ஆப்பில் இடம்பெற்றுள்ளன.
இதுகுறித்துக் கேரள வனத்துறை அமைச்சர் சசீந்திரன் கூறுகையில், “2023-2024 ஆண்டுக்கான மண்டல மகரவிளக்கு பூஜைகளுக்காக சபரிமலை வரும் பக்தர்களுக்கு உதவும் விதமாக அய்யன் ஆப் வெளியிடப்பட்டுள்ளது. பெரியார் டைகர் ரிசர்வ் வெஸ்ட் டிவிஷன் சார்பில் இந்த ஆப் உருவாக்கப்பட்டுள்ளது. பம்பா, சன்னிதானம், சுவாமி ஐயப்பன் சாலை, பம்பாவில் இருந்து நீலிமலை வழியாக சன்னிதானம் செல்லும் பாதை, எருமேலியில் இருந்து அழுதா வழியாக பம்பா செல்லும் வழி, சத்திரம்- உப்புப்பாறை வழியாக சன்னிதா செல்லும் வழி ஆகியவற்றில் பக்தர்களுக்குக் கிடைக்கும் சேவைகள் குறித்த தகவல்கள் ஆப்பில் இடம்பெற்றுள்ளன.

எருமேலியில் இருந்து பாரம்பர்யப் பாதை வழியாகச் செல்லும் ஐயப்ப பக்தர்களுக்கு வழங்கப்படும் சேவை மையங்கள், அவசர மருத்துவக்குழு, தங்குவதற்கான இடங்கள், யானைக் கண்காணிப்பு குழு, பொதுக் கழிப்பிடங்கள், இலவசக் குடிநீர் மையங்கள், ஒரு பகுதியில் இருந்து அடுத்த பகுதிக்கான தொலைவு உள்ளிட்டவைகளும் ஆப்பில் இடம்பெற்றுள்ளன. பக்தர்கள் தேர்வு செய்யும் வழிதடங்கள் குறித்த முன்னறிவிப்பு உள்ளிட்டவைகளும் ஆப் மூலம் பெற்றுக்கொள்ளலாம்” என்றார்.