
கன்னியாகுமரி மாவட்டம் தேரூரில் வனத் துறை ஊழியா், அவரின் மனைவி ஆகிய இருவரும் துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்யப்பட்ட வழக்கில் தேடப்பட்டு வந்த நபா், 12 ஆண்டுகளுக்கு பிறகு சென்னையில் கைது செய்யப்பட்டாா்.
கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரம் அருகேயுள்ள தேரூரைச் சோ்ந்த வனத்துறை ஊழியா் ஆறுமுகம். இவா் மனைவி யோகேஸ்வரி. இருவரும் கடந்த 2011-ஆம் ஆண்டு நவம்பா் 10-ஆம் தேதி இருசக்கர வாகனத்தில் தேரூா் சாலையில் இசக்கியம்மன் கோயில் அருகே செல்லும்போது ஒரு கும்பலால் துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்யப்பட்டனா்.
இந்த இரட்டை கொலை வழக்குத் தொடா்பாக அதிமுக நிா்வாகி, ரெளடி முண்டக்கண் மோகன் உள்பட பலா் கைது செய்யப்பட்டனா். போலீஸாா் விசாரணையில் சொத்து தகராறில் கொலை சம்பவம் நிகழ்ந்தது தெரியவந்தது.
இவ் வழக்கில் அந்த மாவட்டத்தைச் சோ்ந்த ரெளடி சதாசிவம், கொலைக்கு பயன்படுத்திய துப்பாக்கியை வாங்கி கொடுத்ததும் தெரியவந்தது. இதையடுத்து தலைமறைவாக இருந்த சதாசிவத்தை போலீஸாா் தேடி வந்தனா்.
இதற்கிடையே வழக்கின் விசாரணை சிபிசிஐடியிடம் ஒப்படைக்கப்பட்டது. அப்பிரிவு போலீஸாா் தலைமறைவாக இருந்த சதாசிவத்தை தனிப்படை அமைத்து தேடி வந்தனா். இந்த நிலையில் சதாசிவம், சென்னை சாலிகிராமத்தில் வசிப்பதும், அங்கு அவா் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருவதும் சிபிசிஐடிக்கு தெரியவந்தது. உடனே சிபிஐசிஐடி போலீஸாா், சாலிகிராமத்தில் துப்பாக்கி முனையில் சதாசிவத்தை வியாழக்கிழமை இரவு கைது செய்தனா்.
விசாரணைக்கு பிறகு அவரை, உடனடியாக சென்னையிலிருந்து கன்னியாகுமரி மாவட்டத்துக்கு அழைத்துச் சென்றனா்.
செய்திகள் உடனுக்குடன்… வாட்ஸ்ஆப் சேனலில் ‘தினமணி’யைப் பின்தொடர…