
மேட்டூர் அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக திறக்கப்படும் நீரின் அளவு குறைக்கப்பட்டதால் கடந்த 38 நாட்களில் மேட்டூர் அணையின் நீர்மட்டம் 30.18 அடியாக உயர்ந்துள்ளது.
கர்நாடகம் தமிழகத்திற்கு வழங்க வேண்டிய காவிரி நீரை வழங்காத காரணத்தால் மேட்டூர் அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டது.
நீர்வரத்து சரிந்த நிலையில் குடிநீர் தேவைக்காக அணையில் இருந்து வினாடிக்கு 2,000 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டதால் அணையின் நீர்மட்டம் மளமளவென சரிந்து வந்தது.
கடந்த மாதம் 10 -ஆம் தேதி மேட்டூர் அணையின் நீர்மட்டம் 30.90 அடியாக சரிந்தது. அணையின் நீர்மட்டம் வேகமாக சரிந்து வந்த காரணத்தால் குடிநீர் தேவைக்காக திறக்கப்படும் நீரின் அளவு வினாடிக்கு 2,000 கன அடியிலிருந்து வினாடிக்கு 500கன அடியாகவும், பின்னர் வினாடிக்கு 250 கன அடியாகவும் குறைக்கப்பட்டது.
இதையும் படிக்க | வங்கக் கடலில் இன்று உருவாகிறது ‘மிதிலி’ புயல்!
நீர் திறப்பு குறைக்கப்பட்ட நிலையில் காவிரியின் நீர் பிடிப்புப் பகுதிகளில் அவ்வப்போது லேசான மழை பெய்யத் தொடங்கியது. இதனால் மேட்டூர் அணைக்கு நீர் வரத்து சற்று அதிகரித்தது.
நீர் திறப்பு குறைக்கப்பட்டதாலும் நீர் வரத்து சற்று அதிகரித்த காரணத்தாலும் கடந்த மாதம் 10 ஃஆம் தேதி 30.90 அடியாக இருந்த மேட்டூர் அணை நீர்மட்டம் வெள்ளிக்கிழமை காலை 61.08 அடியாக உயர்ந்துள்ளது. கடந்த 38 நாட்களில் அணையின் நீர்மட்டம் 30.18 அடி உயர்ந்துள்ளது.
வெள்ளிக்கிழமை காலை மேட்டூர் அணைக்கு வினாடிக்கு 3,332 கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 250 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அணையின் நீர் இருப்பு 25.49 டிஎம்சியாக உள்ளது.
செய்திகள் உடனுக்குடன்… வாட்ஸ்ஆப் சேனலில் ‘தினமணி’யைப் பின்தொடர…