கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள தமிழக எல்லை சோதனைச் சாவடிகளில் குடிமைப் பொருள் குற்றப் புலனாய்வுப் பிரிவு ஐஜி ஆய்வு மேற்கொண்டார். அப்போது, இரவு ரோந்து பணியின் போது வாகனச் சோதனையைத் தீவிரப்படுத்த அறிவுறுத்தினார்.
தமிழ்நாடு குடிமைப் பொருள் குற்றப் புலனாய்வுப் பிரிவு ஐஜி நிர்மல் குமார் நேற்று, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தமிழக எல்லையில் உள்ள வேப்பனப் பள்ளி, நேரலகிரி, பேரிகை, பாகலூர், ஜுஜு வாடி, பூனப் பள்ளி, கும்மளாபுரம், கக்கனூர் மற்றும் ஆந்திரா மாநில எல்லையையொட்டியுள்ள வரமலை குண்டா, குருவி நாயனப்பள்ளி உள்ளிட்ட சோதனைச் சாவடிகளில் ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது அவர் கூறியதாவது: தமிழக எல்லை சோதனைச் சாவடிகளின் வழியாகக் கர்நாடக மற்றும் ஆந்திர மாநிலங்களுக்குச் செல்லும் வாகனங்களை உள்ளூர் போலீஸாருடன் இணைந்து குடிமைப் பொருள் குற்றப் புலனாய்வு பிரிவு போலீஸார் சோதனை செய்து, ரேஷன் அரிசி கடத்தலை முற்றிலும் தடுக்க வேண்டும். மேலும், தொடர்ந்து ரேஷன் அரிசியைக் கடத்தும் குற்றத்தில் ஈடுபடுவோரைக் கள்ளச் சந்தை தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும்.
குறிப்பாக, எந்த மாதிரியான வாகனங்கள் மூலம் ரேஷன் அரிசி கடத்தப்படுகிறது. எவ்வாறு வாகனத்தில் மறைத்து கடத்தப்படுகிறது. அதை எப்படி கண்டுபிடிப்பது உள்ளிட்டவை தொடர்பாகச் சோதனைச் சாவடியில் பணியில் ஈடுபடும் போலீஸார் மற்றும் குடிமைப் பொருள் குற்றப் புலனாய்வுப் பிரிவு போலீஸாருக்கு, உயர் அதிகாரிகள் அறிவுறுத்த வேண்டும். இதேபோல, ரயில்கள் மூலம் அண்டைய மாநிலங்களுக்கு ரேஷன் அரிசி கடத்துவதைத் தடுக்க ரயில்களில் தணிக்கை செய்ய வேண்டும்.
இரவு நேரங்களில் சோதனைச் சாவடிகள் இல்லாத சாலைகளில் ரோந்து செல்லும் போது, வாகனத் தணிக்கை மேற்கொள்ள வேண்டும். கடந்த இரு நாட்களில் ரேஷன் அரிசி கடத்தல் வழக்கில் தலைமறைவாக இருந்த முக்கிய குற்றவாளிகள் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.
ஆய்வின் போது, கோவை மண்டல எஸ்.பி பாலாஜி, சேலம் சரக டிஎஸ்பி விஜயகுமார், இன்ஸ்பெக்டர் துளசி மணி, எஸ்.ஐ-க்கள் திபாகர், மணிகண்டன் உள்ளிட்டோர் உடனிருந்தனர். ரயில்கள் மூலம் அண்டைய மாநிலங்களுக்கு ரேஷன் அரிசி கடத்துவதைத் தடுக்க ரயில்களில் தணிக்கை செய்ய வேண்டும்.