சென்னை: ரூ.5 கோடி கடன் பெற்றுத் தருவதாக உத்தர பிரதேச தொழில் அதிபரிடம் ஓராண்டுக்கு முன் ரூ.32 லட்சம் மோசடி செய்யப்பட்ட வழக்கில் தலைமறைவாக இருந்த மேலும் ஒருவரை சென்னை போலீஸார் கைது செய்துள்ளனர். உத்தர பிரசேத மாநிலம் நொய்டாவைச் சேர்ந்தவர் தொழில் அதிபர்பங்கஜ் கபூர். இவர் அம்மாநிலத்தில் விவசாய உணவுப் பொருள் தயாரிக்கும் நிறுவனம் நடத்தி வந்தார். தொழில் நலிவடைந்ததால் அதை விரிவுபடுத்து முயற்சி மேற்கொண்டிருந்தார். இதற்காக கடன் தரும் நிதி நிறுவனத்தைத் தேடினார்.
அப்போது, சென்னை கிழக்கு கடற்கரைச் சாலையில் உள்ள ஈஞ்சம்பாக்கத்தில் செயல்பட்டு வந்த தனியார் நிதி நிறுவனம் பங்கஜ் கபூரை அணுகியது. தங்களால் ரூ.100 கோடிக்கு மேல் கடன் ஏற்பாடு செய்து தர முடியும் என்றது. ஆனால், தனக்கு ரூ.5 கோடி மட்டுமே கடன் தேவைப்படுவதாக பங்கஜ் கபூர் கூறினார். இதையடுத்து, அந்த தொகையைப் பெற்றுத்தர முன் பணமாக ரூ.32 லட்சம் கமிஷன் தர வேண்டும் என நிபந்தனை விதிக்கப்பட்டதையடுத்து, அத்தொகையை பங்கஜ் கபூர் கொடுத்தார். அதை பெற்றுக் கொண்டவர்கள் ரூ.5 கோடி கடன் தொகையை ஏற்பாடு செய்து கொடுக்கவில்லை. மேலும் கமிஷனாக பெற்ற பணத்தையும் திருப்பி வழங்கவில்லை.
அதிர்ச்சி அடைந்த பங்கஜ் கபூர் இதுகுறித்து சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தார். அதன்படி, போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்தனர். இதில், கடன் ஏற்பாடு செய்து தருவதாக உறுதியளித்த நிதி நிறுவனம் போலியானது என்பது தெரியவந்தது. மேலும், கடன் பெற்றுத் தருவதாக மோசடியில் ஈடுபட்டதாக அந்நிறுவனத்தைச் சேர்ந்த சதாம் உசேன் (30), கார்த்திக் (31) ஆகிய இருவர் ஏற்கெனவே கைது செய்யப்பட்டனர். இந்நிலையில், இந்த மோசடியில் தலைமறைவாக இருந்த வேளச்சேரியைச் சேர்ந்த நரசிம்மன் என்ற ராம்தாஸ் (44) என்பவரை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் நேற்று கைது செய்தனர். தொடர்ந்து விசாரணை நடக்கிறது.