பூந்தமல்லி: பூந்தமல்லி அருகே காரில் சட்ட விரோதமாக வைத்திருந்த கை துப்பாக்கி, தோட்டாக்களை போலீஸார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக 3 இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர். திருவள்ளூர் மாவட்டம், பூந்தமல்லி அருகே நசரத்பேட்டை, திரவுபதி அம்மன் கோயில் அருகே சென்னை – பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் நேற்று முன்தினம் இரவு நசரத்பேட்டை காவல் நிலைய ஆய்வாளர் குணசேகரன் தலைமையில் போலீஸார் வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது, அப்பகுதியில் அதிவேகமாக வந்த காரை மடக்கி பிடித்தனர்.
அச்சோதனையில், காரில் சட்டவிரோதமாக 9 எம்.எம்கை துப்பாக்கி, இரு தோட்டாக்கள் வைத்திருந்தது தெரிய வந்தது. இதையடுத்து, போலீஸார் காரில் இருந்த திருவள்ளூர், அரண்வாயல்குப்பத்தைச் சேர்ந்த பிரவீன்(24), நசரத்பேட்டையை சேர்ந்த சுனில்(23), மேப்பூர்தாங்கலை சேர்ந்த நரேஷ்குமார்(21) ஆகிய 3 இளைஞர்களை காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.

போலீஸார் நடத்திய அந்த முதல் கட்ட விசாரணையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு நசரத்பேட்டையில் பாஜக நிர்வாகி பி.பி.ஜி.டி. சங்கரை வெடிகுண்டு வீசி, அரிவாளால் வெட்டிக் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட சாந்தகுமார், முனுசாமி, ராஜ்குமார் ஆகியோர், பிரவீன் உள்ளிட்டவர்களிடம் கை துப்பாக்கி கொடுத்து வைத்திருந்தது தெரியவந்தது. இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த நசரத்பேட்டை போலீஸார், மூவரையும் கைது செய்தனர். தொடர்ந்து, அவர்களிடம் இருந்து கை துப்பாக்கி, இரு தோட்டாக்கள் மற்றும் காரை பறிமுதல் செய்தனர். தப்பியோடிய நாகேந்திரன் என்பவரை தேடி வருகின்றனர்.