ஸ்ரீவில்லிபுத்தூர்: விருதுநகர் மாவட்டம் வீரசோழன் அருகே குடும்பத் தகராறில் கணவன் மனைவி கொலை செய்யப்பட்ட வழக்கில் ஒரே குடும்பத்தை சேர்ந்த தாய், தந்தை, மகன் உட்பட 4 பேருக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்து ஸ்ரீவில்லிபுத்தூர் விரைவு மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே எழுவனூர் கிராமத்தை சேர்ந்த இருளாண்டி மகன் செந்தில்வேல்(45). இவரது மனைவி ஜோதிமுத்து. இவர்களுக்கு இரு மகன்கள், ஒரு மகள் உள்ளனர். ஜோதிமுத்து உயிரிழந்து விட்ட நிலையில் செந்தில்வேல் விருதுநகர் மாவட்டம் வீரசோழன் அருகே கீழசிம்பூர் கிராமத்தை சேர்ந்த வனிதா (45) என்பவரை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார். வனிதாவின் மகள் முனீஸ்வரி அதே பகுதியை சேர்ந்த கணேசன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு ஒரு மகன் உள்ளார்.

கணேசன், முனீஸ்வரி இருவருக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டு வந்தது. மதுரை மாவட்டம் திருமங்கலம் சுக்குராம்பட்டியில் வேலை பார்த்த போது, கணவன் மனைவி இருவருக்கும் பிரச்சினை ஏற்பட்டு திருமங்கலம் போலீஸில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பின் முனீஸ்வரி தனது தாய் வீட்டுக்கு சென்று விட்டார். இந்நிலையில் செந்தில்வேல், வனிதா, இருளாண்டி உட்பட 4 பேர் கடந்த 2018-ம் ஆண்டு டிசம்பர் 24-ம் தேதி இரவு கீழசிம்பூரில் உள்ள கணேசன் வீட்டுக்கு சமாதானம் பேச சென்றனர்.

அப்போது வீட்டிலிருந்த கணேசன்(34), அவரது அப்பா பாண்டி(55), அம்மா பஞ்சவர்ணம்(52), அத்தை மரகதம்(45) ஆகியோர் செந்தில்வேலுடன் தகராறில் ஈடுபட்டனர். கணேசனும், பாண்டியும் சேர்ந்த செந்தில்வேல், வனிதா ஆகியோரை வெட்டி கொலை செய்தனர். இதுகுறித்த புகாரில் வீரசோழன் போலீஸார் வழக்கு பதிவு செய்து, கணேசன், பாண்டி, பஞ்சவர்ணம், மரகதம் ஆகியோரை கைது செய்தனர்.

இந்த வழக்கு விசாரணை ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள மாவட்ட விரைவு மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இதில் கொலை வழக்கில் கணேசன், பாண்டி ஆகியோருக்கு இரட்டை ஆயுள் தண்டனையும், கொலை செய்ய தூண்டியதாக பஞ்சவர்ணம், மரகதம் ஆகியோருக்கு இரட்டை ஆயுள் தண்டனை மற்றும் ரூ.26 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி பகவதியம்மாள் தீர்ப்பளித்தார்.

Source link

By Admin S

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: