‘உன்னைப் போல் ஒருவன்’ டாஸ்க், போட்டியாளர்களுக்கு தரப்பட்ட ஒரு நல்ல வாய்ப்பு. நடிப்புத் திறமையும் நகைச்சுவை உணர்வும் உள்ளவர்களாக இருந்திருந்தால் இந்த டாஸ்க் ரகளையாக இருந்திருக்கும். ஆனால் பெரிதான சுவாரசியமில்லாமல் முடிந்தது.

சுமாரான ஆட்டக்காரர்களை வெளியே அனுப்ப வேண்டும் என்கிற முடிவில் பெரும்பாலானவர்கள் சிந்தித்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த வார எலிமினேஷில் வாக்களிக்கும் பார்வையாளர்களும் அதையே பிரதிபலிப்பார்களா? பார்ப்போம்.

பிக் பாஸ் வீட்டில் நடந்தது என்ன?

ஒருவழியாக மாயவும் விசித்ராவும் நேருக்கு நேர் பேச அமர்ந்தார்கள். “நீங்க பண்ணதுக்கு எல்லாம் நான் ஸாரி சொன்னேன். ஆனால் நீங்கள் இன்னமும் சொல்லவில்லை. எதைப் பற்றியா? பெண்கள் trauma பற்றியது. அதையெல்லாம் மீண்டும் சொல்ல விரும்பவில்லை. விக்டிம்தான் எப்பவும் கஷ்டப்படணுமா? இதன் தீவிரம் உங்களுக்குப் புரியலையா?.. நாங்க விளையாட்டா சொன்ன சிலதையெல்லாம் bullying-ன்னு நீங்க நினைச்சுட்டு இருக்கீங்க” என்றெல்லாம் மாயா விளக்கம் அளிக்க “கமல் சார் எபிசோட் அப்புறமாத்தான் புரிஞ்சுகிட்டேன்” என்றார் விசித்ரா. இந்த சமாதான உடன்படிக்கையை மாயா முன்பே செய்திருந்தால் ஒரு வாரத்திற்கு வீடு ரணகளம் ஆகியிருக்காது.

விசித்ரா – மாயா

“தன்னுடைய சொந்தப் பிரச்சினையால்தான் இவ்வளவு எதிர்ப்பு தெரிவிக்க வேண்டியிருந்தது” என்று மாயா மீண்டும் சொல்லும் அதே லாஜிக் சரியில்லை. தனக்கு கிடைத்த மனவலியை இன்னொருவருக்கு எந்தவொரு வழியிலும் தராமல் இருப்பதுதான் அடிப்படையான மனிதநேயம். விசித்ரா தரப்பிலும் பிழை உண்டு. ‘நான் சில பிரச்சனைகளால் பாதிக்கப்பட்டேன்’ என்று ஒரு பெண் சொன்ன பிறகுதான் அதன் பின்னணிப் பிரச்சினைகளை வைத்துப் புரிந்து கொண்டேன் என்று விசித்ரா சொல்வது முரண். ஒரு பெண்ணாக, விசித்ராவின் உள்ளுணர்வு தன்னிச்சையாக இதை அறிந்திருக்க வேண்டும். மேலும் அவர் உளவியல் படித்தவர் வேறு.

நடு இரவில் எழுந்த விக்ரம், மிக்சர் பாக்கெட்டை நொறுக்கிக் கொண்டிருந்தார். காமிராவைப் பார்த்ததும் மாட்டிக் கொண்ட சிறுவன் மாதிரி மலங்க மலங்க விழித்தார். பாவம், பசி போலிருக்கிறது. ஏற்கனவே அவரை மிச்சர் பார்ட்டி என்று கிண்டல் செய்து கொண்டிருக்கிறார்கள். இதை அவரே வேறு செய்து காட்டி உறுதிப்படுத்த வேண்டுமா? இந்த துண்டுக் காட்சியை சரியாக கோர்த்து எடிட்டிங் டீம் கூடுதலாகக் கிண்டல் அடித்தது.

‘Trauma வெச்சு டிராமா பண்றாங்க’ – விஷ்ணு எழுதிய கவிதை

விஷ்ணுவும் மணியும் தங்கள் கேரக்டர்களில் இருந்து வெளியே வந்து பேசிக் கொண்டிருந்தார்கள். “trauma-லாம் வச்சு டிராமா பண்றாங்க. நீங்க பண்றதுதான் மற்றவர்களுக்கு trauma-வா ஆகுது. நீ என்ன வேணா பண்ணிக்கோ. நான் அதைப்பத்திலாம் சட்டையே பண்ண மாட்டேன்” என்று மாயாவைப் பற்றி கெத்தாக புறணி பேசிக் கொண்டிருந்தார் விஷ்ணு.

பூர்ணிமா, மாயாவாக வேடமிட்ட விஷ்ணு மற்றும் மணி “நாங்க உன்னை கேப்டன் ஆக்கிடுவோம். இதோ இந்த கிளாசை வாங்கி கீழே வை..போதும்…அவ்வளவுதான்… நீதான் கேப்டன்” என்று விக்ரம் வேடத்தில் இருந்த அர்ச்சனாவிடம் சொல்லிக் கொண்டிருந்தார்கள். இதன் மூலம் விக்ரமை பயங்கரமாக பங்கம் செய்து கொண்டிருந்தார்கள்.

மணி, கூல் சுரேஷ்,விஷ்ணு

அர்ச்சனா வேடத்தில் இருந்த சுரேஷிற்கு கதறி அழுவதை தவிர வேறு எதுவும் தெரியவில்லை. விஷ்ணுவின் மடியில் படுத்துக்கொண்டு “நான் வீட்டுக்குப் போறேன் பிக் பாஸ்” என்று அவர் கதறியழ “அர்ச்சனா.. உன்னை அப்படியே ஒண்ணு வெச்சனா” என்று விளையாட்டாக கையை ஓங்கி மணி செய்த காமெடி நல்ல டைமிங். பிறகு விஷ்ணுவிடம் “இவளை அழாமல் பார்த்துக்கங்க. அழுதே ஸ்கோர் பண்ணிடுவா” என்று சொன்னதும் நல்ல கமெண்ட். ஆனால் ‘சிங்கமொன்று புறப்பட்டதே’ மாதிரி பின்னர் சிலிர்த்தெழுந்த அர்ச்சனாவை ‘அழுமூஞ்சியாக’வே சுரேஷ் தொடர்ந்து சித்தரிப்பது முறையல்ல.

இரண்டு தரப்பிலும் நிகழ்ந்த விவாதம்

‘உன்னைப் போல் ஒருவன்’ டாஸ்க்கின் அடுத்தக் கட்டம். சில கேள்விகளுக்கு இரண்டு தரப்பிலும் விவாதம் செய்ய வேண்டும். வெல்லும் அணிக்கு ஒரு ஸ்டார் பரிசு. ‘யாருடைய கட்டுப்பாட்டில் கிச்சன் நன்றாக செயல்படும்?’ என்பது பிக் பாஸ் தந்த கேள்வி. மணியின் வேடத்தில் இருந்த ரவீனாவும் அர்ச்சனாவின் வேடத்தில் இருந்த சுரேஷும் இதற்காக ‘கச்சா முச்சா’ என்று மல்லுக் கட்டினார்கள். ஆனால் நிதானமாக எழுந்து நின்ற நிக்சன்தான் (விசித்ரா) அட்டகாசமாக ஸ்கோர் செய்தார். “யுகேந்திரனுக்கு சமையல் சொல்லிக் கொடுத்ததே நான்தான். ப்ரொவிஷன் பொருட்களை சரிபார்ப்பதில் இன்றைக்கும் ஜோவிகாதான் டாப்” என்றெல்லாம் பாயிண்ட்டுகளை அவர் அள்ளி வீச, பெண்கள் அணி வெற்றி பெற்றதாக நடுவர் கானா பாலா அறிவித்தார்.

பூர்ணிமா, மாயா, அர்ச்சனா

அடுத்த கேள்வி, வீடு சிறப்பாக நிர்வகிக்கப்பட்டது, ஆண்களின் கேப்டன்ஸியிலா அல்லது பெண்களின் கேப்டன்ஸியிலா?’ பூர்ணிமாவின் வேடத்தில் இருந்த மணி, “நான்தான் ஸ்மால் பிக் பாஸ் ஹவுஸில் சேர் போட்டேன். பிக் பாஸிடம் பேசி டிஸ்கவுன்ட் வாங்கினேன். செல்போன் சார்ஜிங் டாஸ்க்கில் போனை திருப்பி வைத்ததை பிக் பாஸ் பாராட்டினார். கமல் சாரே எனக்கு ஸ்டார் கொடுத்தார்” என்றெல்லாம் பெருமையை பீற்றிக் கொண்டார்.

கூல் சுரேஷ் வேடத்தில் இருந்த விசித்ரா, கபால் என்று எழுந்து “நீங்க ரெண்டு பேரும் சேர்ந்து நல்லா போட்டீங்களே ஆட்டம்… கிச்சன் ஸ்ட்ரைக்ன்னு சொல்லி சாப்பாட்டை உள்ளே பதுக்கி வச்சு சாப்பிட்டீங்க. விஜய் இருக்கும்போதுதான் வீடு கட்டுப்பாடாக இருந்தது. விக்ரம் அமைதியான கேப்டனா இருந்தான்” என்று அவர் சொல்ல ‘ஆமாம்.. விக்ரம் இப்பவும் அமைதியாதான் இருக்கான்’ என்று யாரோ கலாய்த்தார்கள். கூல் சுரேஷ் ஒப்பனையில் இருந்தாலும், சந்தடி சாக்கில் “அந்த அம்மாவை நீங்க ரெண்டு பேரும் பண்ணீங்களே கொடுமை” என்று தன் சுயபரிதாபக் கதையையும் விசித்ரா பேரில் எழுதிக் கொண்டது, கேரக்டர் படுகொலை. ‘ஆண்கள் கேப்டன்ஸியில்தான் வீடு சிறப்பாக இருந்தது’ என்று தீர்ப்பளித்தார் பாலா.

இந்த சீசனின் டைட்டில் வின்னர் ஆணா, பெண்ணா?

அடுத்தது முக்கியமான கேள்வி. ‘டைட்டில் ஜெயிக்கப் போவது ஆணா அல்லது பெண்ணா?’ ஜோவிகா வேடத்தில் இருந்த பிராவோ, “இந்த வீட்டில் எல்லா நிகழ்வுகளுக்கும் பெண்கள்தான் காரணம். சண்டைக்கும் நாங்கள்தான் காரணம் தீர்வு ஏற்படுவதற்கும் நாங்கள்தான் காரணம்” என்றெல்லாம் பேசி விட்டு ‘இத்தனை சீசன்ல பெண்கள் ஒருமுறை கூட வென்றதில்லை’ என்கிற தவறான தகவலைத் தந்தார். இரண்டாம் சீசனில் டைட்டில் வென்றவர் ரித்விகா.

பிக் பாஸ் ஹவுஸ்மேட்ஸ்

பிராவோ பேசியதை எதிர்த்து தினேஷ் கேரக்டரில் இருந்த பூர்ணிமா பேசும்போது “டைட்டில் ஜெயிக்க எனக்குத்தான் பத்து பொருத்தம் இருக்கு. நான் உள்ளே வரும் போது எல்லோரையும் வெச்சு செஞ்சிருக்கேன். வெளிய பார்த்த கன்டென்ட்டை உள்ளே கொண்டு வந்து ஜட்டி பிரச்சினையா ஆக்கினேன். சம்பந்தமே இல்லாம பேசுவேன். பெண்கள் பிரச்சினைன்னா நான் கேப்பேன். ஏன்னா நான் ஆம்பளை.. என்று தினேஷை மறைமுகமாக இறங்கி அடித்தார். ஆனால், என்னதான் இது சர்காஸம் என்றாலும், தினேஷ் கேரக்ட்டர் தன்னையே தாழ்த்தி பேசிக் கொள்ளுமா என்பதை பூர்ணிமா யோசித்திருக்க வேண்டும். மூச்சு வாங்க பூர்ணிமா பேசி விட்டு இறுதி வாக்கியமாக ‘டைட்டில் வின்னர் யாருன்னா..’ என்று சொல்லி முடிப்பதற்குள், யாரோ ‘விக்ரம்’ என்று சுருக்கமாகச் சொல்லி காமெடி செய்தார்கள். (விக்ரம் டைட்டில் வென்றதாக வெளியே போடுகிற மீம்ஸின் சத்தம் வீட்டுக்குள்ளும் கேட்கிறது போல!).

இறங்கி அடித்த பூர்ணிமாவிற்கு பதில் சொல்வதற்காக அக்ஷயாவின் வேடத்தில் இருந்த தினேஷ் எழுந்தார். என்னதான் அவர் கிளிப்பிள்ளை போல மழலையில் பேச முயன்றாலும் பெண் ஒப்பனை தினேஷிற்கு செட் ஆகவில்லை. (அத்தைக்கு மீசை முளைச்சா சித்தப்பா. ஆனா இவருக்கு தாடியும் இருந்தது) “இந்த வீட்டில் பெண்கள்தான் உரிமைக்குரல் எழுப்பினார்கள். ஆண்கள் பாதியிலேயே போய் விட்டார்கள். எந்தவொரு கன்டென்ட்டிலாவது ஆண்கள் இருக்கிறார்களா?.. இல்லை. எனவே பெண்கள்தான் டைட்டில் வின்னர் ஆக தகுதியானவர்கள்” என்றெல்லாம் பேசி ‘உரிமைக்குரலை’ குத்திக் காட்டினார் தினேஷ்

தினேஷ்

இதில் பெண்கள் அணி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. “ஆண்களாகவே இருந்தாலும் பெண்களின் சார்பில் திறமையாக வாதாடினார்கள்” என்று பாராட்டினார் கானா பாலா. ஆக ஒட்டுமொத்த டாஸ்க்கில் பெண்களாக வேடமிட்ட ஆண்கள் அணி வெற்றி பெற்றதால் அவர்களுக்கு இடையே கலந்தாலோசித்து அதில் தேர்வு செய்யப்படுபவருக்கு ஸ்டார் வழங்கப்படும். ‘மணிக்கு கொடுத்துடலாம். அவனுக்கு யூஸ் ஆகும்’ என்பது மாதிரி உரையாடல் செல்ல “விஷ்ணு.. நீ ஸ்டார் கேளு..” மாயாவும் சைகை காட்டினார்கள். “அவன்தான் டேஞ்சரில் இருக்கான்” என்று விஷ்ணு சொன்னதைக் கேட்டு ‘அட லூஸூப் பயலே’ என்பது மாதிரி தலையில் அடித்துக் கொண்டார்கள்.

சொதப்பலாக முடிந்த டாஸ்க்

நிக்சனை வெளியே கூட்டிக் கொண்டு வந்த மணி “இப்பதான் நீ நல்ல ஆடறே.. உனக்கு இரண்டாவது சான்ஸ் மாதிரி இருக்கு. கீப் இட் அப்” என்று பாராட்டினார். மணிக்கு ஸ்டார் வழங்கப்பட்டது பூர்ணிமா மற்றும் மாயாவிற்கு பிடிக்கவில்லை. “அவன் ஆல்ரெடி இரண்டு ஸ்டார் வச்சு இருக்கான். எதுக்கு இன்னொன்னு தரணும்.. ஒருத்தனை காப்பாத்தறதுக்கா ஸ்டார் தரணும். மணியை விட விக்ரம் பெட்டர் பிளேயர். நீ பாட்டுக்கு கர்ணன் மாதிரி விட்டுக் கொடுத்துட்டே” என்று பிராவோவை கேள்வி கேட்டு வறுத்து எடுத்துக் கொண்டிருந்தார் மாயா.

ஒரு வழியாக ‘உன்னைப் போல் ஒருவன்’ டாஸ்க் முடிந்தது. இந்த டாஸ்க்கில் நகைச்சுவையோ, சுவாரசியமோ பெரிய அளவிற்கு வெளிப்படவில்லை என்பது ஒரு பக்கம் இருக்கட்டும். “யார் யார் எந்த கேரக்டர் என்பதைப் புரிந்து கொள்ளவே பாயைப் பிறாண்ட வேண்டும் போல் இருந்தது.

பூர்ணிமா, மாயா

“என்ன பண்ணாலும் ஒரிஜினல் கேரக்டர் வெளியே வந்துடுதுல்ல” என்று பேசிக் கொண்டிருந்தார் விசித்ரா. ஆம். அவர் கூல் சுரேஷ் பாத்திரத்தில் இருந்தாலும், தனக்குத் தானே நைசாக சப்போர்ட் செய்வதைத் தொடர்ந்து கொண்டே இருந்ததால் அவருக்குத்தான் இந்த கமென்ட் முதலில் பொருந்தும், “விக்ரம் பாத்திரத்தில் இருந்தது போர் அடித்தது. சும்மாவே உட்கார்ந்திருந்தேன் என்று பாவனையாக அலுத்துக் கொண்டார் அர்ச்சனா. “ஒரு நாளைக்கே இப்படி சொல்ற. நாங்க 40 நாள் அவனை இப்படித்தான் பார்க்கறோம்” என்று கிண்டலடித்தார் சுரேஷ்.

மீந்து போன லட்டுகளை வைத்து இன்னொரு டாஸ்க் ஆரம்பித்தார் பிக் பாஸ். இதில் ரவீனாவிற்கு ஒரு ஸ்டாரும், விஷ்ணுவுக்கு இரண்டு ஸ்டார்களும் லக் அடித்தது. போன தீபாவளிக்கு செய்த ஸ்வீட் எல்லாம் பிக் பாஸ் இன்னமும் உள்ளே வைத்திருக்கிறார் போல. பாறாங்கல் போல் இருந்த ரவா லட்டை மக்கள் உடைத்து, கடித்து, சுரண்டித் தேய்த்து ஸ்டாரை வெளியில் எடுக்க வேண்டியதாக இருந்தது.

‘கல்யாண மாலை’ நிகழ்ச்சி போல பேசிய விஷ்ணு

‘இங்க என்ன சொல்லுது ஜெஸ்ஸி’ மோடில் தீவிரமாக இறங்கி இருக்கும் விஷ்ணு, பூர்ணிமாவிடம் “உன்கிட்ட நல்ல குணம் எல்லாம் இருக்கு” என்று பேச்சை ஆரம்பிக்க “ஏங்க.. நான் நல்ல பொண்ணுதாங்க” என்று ஆச்சரியப்பட்டார் பூர்ணிமா. “உன்கிட்ட திறமை இருக்கு. ஆனா நெகட்டிவ் ஷேடு அதிகமா தெரியுது அதை விட்டுட்டா சூப்பர்” என்று விஷ்ணு சொல்கிற கணிப்பு சரியானது. மாயா இல்லாவிட்டால் பூர்ணிமா எப்படி ஆட்டத்தைத் தொடர்கிறார் என்று பார்த்தால் இது தெரிந்து விடும்.

விஷ்ணு, பூர்ணிமா

“இந்த ஸ்டார்லாம் சும்மா. நாம நீதிபதி கிடையாது. மக்கள்தான் முடிவு பண்ணுவாங்க. எப்ப வெளியே அனுப்பிச்சாலும் நான் ரெடி” என்றெல்லாம் சவடாலாக பேசிய விஷ்ணு, அடுத்ததாக ஏதோ ‘கல்யாண மாலை’ நிகழ்ச்சியில் மணமகன் தன்னைப் பற்றி சொல்லிக் கொள்வது போல பேச்சைத் தொடர்ந்தார் “எந்தப் பொண்ணைக் கட்டினாலும் எங்க வீட்ல ஒண்ணும் சொல்ல மாட்டாங்க. லவ், கல்யாணம் எதுவா இருந்தாலும் ஓப்பனா சொல்லுவேன். Most Eligible bachelor. வெல் செட்டில்டு” என்றெல்லாம் பூர்ணிமாவிடம் அவர் சொல்லிக் கொண்டிருந்தது ஒரு அழுத்தமான மறைமுக proposal. “நீ ஒரு நல்ல பிளேயர். ஆனா you are not on the right track” என்பது பூர்ணிமாவின் ஆட்டத்தைப் பற்றிய விஷ்ணுவின் கணிப்பு.

விசித்ராவிற்கும் மாயாவிற்கும் இடையில் நடந்த Cat-Mouse கேம்

வீட்டில் ஆங்காங்கே வம்புகள் பெருகியோடின. எல்லோருக்கும் நல்ல பிள்ளையாக இருந்து தொடர்ந்து தப்பிக்கும் லிஸ்டில் விக்ரம், அக்ஷயா, சுரேஷ் போன்றவர்களின் பெயர்கள் அலசப்பட்டன. ‘கூல் எப்படி தப்பிக்கறாரு?’ என்று விசித்ரா கேட்க “அவரையெல்லாம் எப்ப வேணா தட்டிடலாம். நீங்க ரெண்டு முறை அவரை நாமினேட் பண்ணுங்க” என்றார் தினேஷ். “இந்த வாரம் அக்ஷயாவும் விக்ரமும் ஜோடியா வெளியே போயிடுவாங்க” என்று ஆருடம் சொல்லிக் கொண்டிருந்த விஷ்ணு, “விசித்ரா கிளவரா ஆடறாங்க.. போன சீசன்ல தாமரைச்செல்வி இருந்தாங்கள்ல.. அந்த மாதிரி” என்றார்.

மாயா, விசித்ரா

“நீங்கதான் டைட்டில் வின்னர். இந்த ஆட்டக்காரி சொல்றேன்” என்று இன்னொரு பக்கம் விசித்ராவை உசுப்பேற்றிக் கொண்டிருந்தார் மாயா. “இதுவரைக்கும் பெரிசா நாமினேட் ஆகாதவங்க வெளில போகணும். விக்ரம், அக்ஷயா, சுரேஷ், மணி” என்று அவர் லிஸ்ட் போட “விக்ரமையெல்லாம் நீங்கதானே காப்பாத்தறீங்க” என்று சரியான பாயிண்ட்டை எடுத்து வைத்தார் விசித்ரா. “மணியை விட அவன் பெட்டர் பிளேயர். ஸ்டார் கொடுத்து மணியை ஏன் காப்பாத்தணும். எலிமினேட் ஆகட்டும். அவன் காப்பாத்தப்படறதால மத்தவங்க சான்ஸ் குறையுது” என்றார் மாயா.

‘ஐஷூ ஏன் எலிமினேட் ஆனா?’ என்கிற தலைப்பில் மாயா, விசித்ரா, ஜோவிகா ஆகியோர் ஆய்வு செய்து கொண்டிருந்தார்கள். அவ போனதுக்கு அவளேதான் காரணம். நல்ல பிளேயர் இல்ல” என்று வாதாடிய விசித்ரா “அது சரி. நல்லா விளையாடறவங்க இருக்கணும்ன்னு சொல்றீங்க. அப்ப ஏன் என்னை நாமினேட் பண்ணீங்க?” என்கிற சரியான கேள்வியைப் போட மாயாவின் பதில் மழுப்பலாக இருந்தது.

“உங்க கூடயே இருந்தவங்க.. நாமினேட் பண்ணியிருக்க மாட்டாங்களா.. ஜோக் பண்ணாதீங்க” என்று சமாளித்தார் மாயா. “என் கிட்டயே கேம் ஆடாதீங்க.. டீமா நீங்க இருக்கறது தெரியாதா” என்று விசித்ரா சொல்ல, “அப்ப நீங்க கேம் ஆடறீங்க. கரெக்ட்டுதானே. இல்லைன்னு சொல்றீங்களா?.” என்று மாயா மடக்க, இந்த எலி-பூனை ஆட்டம் மழை பெய்ததால் நின்று போனது.

இவர்கள் இடும் வருங்காலத் திட்டத்தின்படி, சுமாராக ஆடுபவர்கள் வெளியே சென்று மேலும் பல டிவிஸ்ட்கள் நடந்தால் ஆட்டம் சுவாரசியமாக மாறும். அது நடக்குமா?உங்கள் கருத்தை கமென்ட்டில் பதிவிடுங்கள்!

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: