நாகர்கோவில்: திருநெல்வேலியில் இருந்து நாகர்கோவிலுக்கு காரில் கடத்தி வரப்பட்ட ரூ.10 கோடிக்கு மேல் மதிப்புள்ள அம்பர் கிரீஸை போலீஸார் பறிமுதல் செய்தனர். 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
திமிங்கலத்தின் உமிழ்நீரான `அம்பர் கிரீஸ் உயர்வகை மருந்து பொருட்கள் மற்றும் வாசனை திரவியங்கள் தயாரிப்பதற்கான அரிய பொருளாக கருதப்படுகிறது. தடை செய்யப்பட்ட அம்பர் கிரீஸை கள்ளச்சந்தையில் அதிக விலைக்கு விற்பனை செய்யும் நிகழ்வு சமீப காலமாக அதிகரித்து வருகிறது. இந்நிலையில் நாகர்கோவில் பகுதியில் அம்பர் கிரீஸை விற்பனைக்காக காரில் கடத்தி வருவதாக போலீஸாருக்கு தகவல் வந்தது.
இதைத் தொடர்ந்து நேற்று முன்தினம் இரவு நாகர்கோவில் டிஎஸ்பி நவீன்குமார் தலைமையில் வடசேரி போலீஸார், மற்றும் தனிப் படையினர் வட சேரி பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகத்துக்கு இடமான வகையில் டெல்லி பதிவெண்ணுடன் வந்த காரை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். காரில் இருந்த 4 பேரை பிடித்து விசாரித்தனர்.
அவர்கள் பதற்றத்துடன் முரண்பட்ட தகவல்களை தெரிவித்தனர். இதையடுத்து காரை சோதனை செய்த போது காரில் அம்பர் கிரீஸ் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. மொத்தம் 11 கிலோ அம்பர் கிரீஸை பறிமுதல் செய்த போலீஸார் குமரி வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர். கடத்தலுக்கு பயன் படுத்தப்பட்ட காரும் பறிமுதல் செய்யப்பட்டது. காரில் இருந்த 4 பேரையும் வனத்துறையினர் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்டவர்களிடம் விசாரணை நடத்திய போது அவர்கள் முன்னீர் பள்ளத்தைச் சேர்ந்த நாராயணன் (41), மேலப்பாளையத்தை சேர்ந்த அருணாச்சலம் (53), வேலாயுதம் (47), நாங்குநேரியைச் சேர்ந்த சுந்தர் (25) என்பது தெரியவந்தது. திருநெல்வேலியில் இருந்து நாகர்கோவிலுக்கு அம்பர் கிரீஸை விற்பனைக்காக அவர்கள் கடத்து வந்துள்ளனர். அம்பர் கிரீஸை வாங்க இருந்த நாகர்கோவிலை சேர்ந்தவரை தேடி வருகின்றனர். பறிமுதல் செய்யப்பட்ட அம்பர் கிரீஸின் சர்வதேச மதிப்பு ரூ.10 கோடிக்கு மேல் என தெரியவந்துள்ளது.