சென்னை: சென்னை பாரிமுனையில் தங்கியிருந்த இலங்கையைச் சேர்ந்த நபரை கடத்திச் சென்று பணம் கேட்டு மிரட்டிய 7 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

இது தொடர்பாக காவல் துறை தரப்பு வெளியிட்ட தகவல்: இலங்கையைச் சேர்ந்த பெண்மணி ஒருவர், சென்னை பெருநகர காவல் கட்டுப்பாட்டறைக்கு தொடர்பு கொண்டு தனது தந்தை முகமது ஷியாம் (50), என்பவர் வியாபாரம் தொடர்பாக இலங்கையிலிருந்து சென்னைக்கு வந்து பாரிமுனையில் தங்கியிருந்ததாகவும், புதன்கிழமை (நவ.15) எனது தந்தை செல்போனிலிருந்து பேசிய நபர் தனது தந்தையை கடத்தி வைத்திருப்பதாகவும், ரூ.15 லட்சம் பணம் அனுப்பினால் விடுவிப்பதாகவும் மிரட்டியதாக புகார் தெரிவித்தார். இது தொடர்பாக, வடக்கு கடற்கரை காவல் நிலையத்தில் (B-1) வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

வடக்கு கடற்கரை காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான போலீஸார் கடத்தப்பட்ட முகமது ஷியாமின் செல்போன் எண்ணை வைத்து, தீவிர விசாரணை செய்து, மேற்படி கடத்தலில் ஈடுபட்ட சித்ரா (43), ரியாஸ் அஸ்கர் (47), வேல்முருகன் (41), தினேஷ் (31), ஆகிய 4 நபர்களை வியாழக்கிழமை (நவ.16) கைது செய்து, கடத்தப்பட்ட முகமது ஷியாமை மீட்டனர். கைதானவர்களிடமிருந்து 1 கார் பறிமுதல் செய்யப்பட்டது. விசாரணையில் கடத்தப்பட்ட முகமது ஷியாம் என்பவர் சித்ராவுக்கு பணம் கொடுக்க வேண்டியுள்ளதால், சித்ரா தனது ஆண் நண்பர் மற்றும் கூட்டாளிகளுடன் சேர்ந்து முகமது ஷியாமை காரில் கடத்திச் சென்று, முகமது ஷியாமின் மகளுக்கு செல்போனில் தொடர்பு கொண்டு பணம் கேட்டு மிரட்டியது தெரியவந்தது.

மேலும் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு இந்த கடத்தல் வழக்கில் தொடர்புடைய ஹரிகிருஷ்ணன் (29), சுரேஷ்(33), பாலசுப்பிரமணி (34) ஆகிய மூவரை இன்று (நவ.17) கைது செய்தனர். அவர்களிடமிருந்து 2 செல்போன்கள், பாஸ்போர்ட், ரொக்கம் ரூ.4890 ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.கைது செய்யப்பட்ட 7 நபர்களும் இன்று நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்படவுள்ளனர்.

Source link

By Admin S

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: