திருப்பூர்: கோவை – சேலம் தேசிய நெடுஞ்சாலையில், அதிவேகமாக இருசக்கர வாகனத்தை ஓட்டி ‘வீலிங்’ சாகசத்தில் ஈடுபட்ட இளைஞரை, பொதுமக்கள் அளித்த புகாரின் பேரில் ஊத்துக்குளி போலீஸார் கைது செய்தனர்.
திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி அருகே செங்கப்பள்ளி, கோவை – சேலம் தேசிய நெடுஞ்சாலையில், அதிவேகமாக செல்லக்கூடிய விலை உயர்ந்த இருசக்கர வாகனத்தை இளைஞர் ஒருவர், வேகமாக ஓட்டி ‘வீலிங்’ சாகசம் செய்து காட்டினார். முன் சக்கரம் தரையில் படாமல் ஓட்டியதை பார்த்த பலரும் அதிர்ச்சி அடைந்தனர். இது தொடர்பாக அப்பகுதி மக்கள் இணையத்தின் வாயிலாக, சென்னை சட்டம் – ஒழுங்கு ஏ.டி.ஜி.பி-க்கு புகார் அளித்தனர்.
இந்த புகாரின் பேரில், ஊத்துக்குளி போலீஸார் விசாரித்து வந்தனர். போலீஸார் விசாரணையில், திரு முருகன் பூண்டியை சேர்ந்த கட்டிடத் தொழிலாளி துரை ராஜ் என்பதும், இவர் தனது இருசக்கர வாகனத்தை கோவை – சேலம் தேசிய நெடுஞ்சாலையில் அபாயகரமாக ஓட்டி சாகசம் செய்ததும், மேலும் அதனை வீடியோ எடுத்து தனது இன்ஸ்டா கிராம் பக்கத்தில் பதிவு செய்ததும் தெரிய வந்தது.
தொடர்ந்து வழக்கு பதிவு செய்த ஊத்துக்குளி போலீஸார் இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்து, துரை ராஜை (23) கைது செய்து சிறையில் அடைத்தனர்.