சென்னை: ஏழ்மை காரணமாக அரிக்கேன் விளக்கு வெளிச்சத்தில் படிக்க முடியாமல் அவதிப்பட்ட மாணவி அனுஷ்காவுக்கு ஆசிரியர்களும், மாணவ, மாணவியரும் சேர்ந்து சோலார் விளக்கு வாங்கித் தந்து கல்வி தீபம் ஏற்றியுள்ளனர். காஞ்சிபுரம் மாவட்டம், உத்தர மேரூர் ஒன்றியம், திருவந்தவார் கிராமத்தில் உள்ளது ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி. இங்கு 8-ம் வகுப்பு படிக்கும் இருளர் இனத்தைச் சேர்ந்த மாணவி கு.அனுஷ்கா. இவருக்கு அப்பா இல்லை. அம்மா சகுந்தலா மட்டும்தான். அவர் 100 நாள் வேலைக்கு போகிறார். வீட்டுக்கு ஒரே பெண் அனுஷ்கா. நன்றாகப் படிக்கும் இந்த மாணவி, ஆசிரியர்கள் கொடுக்கும் வீட்டுப் பாடத்தை தொடர்ந்து எழுதி வராமல் இருந்திருக்கிறார்.
அதனால் அவரிடம் வகுப்பு ஆசிரியரும் அறிவியல் ஆசிரியருமான சு.காந்திராஜ், ஏன் வீட்டுப் பாடம் எழுதாமல் வருகிறாய். படிக்க விருப்பமில்லையா அல்லது வேறு எதுவும் பிரச்சினையா என்று கேட்டுள்ளார். அதற்கு அந்த மாணவி, “என் வீட்டில் அரிக்கேன் விளக்கு மட்டும் தான் இருக்கிறது. அதனால் அந்த வெளிச்சத்தில் படிக்கவோ, வீட்டுப் பாடம் எழுதவோ முடியவில்லை” என்று வேதனையுடன் தெரிவித்துள்ளார். அதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த ஆசிரியர் இந்தக் காலத்திலும் இப்படியொரு பிரச்சினையா என்றுபள்ளித் தலைமை ஆசிரியர் சிவகளை மற்றும் சக ஆசிரியர்களுடன் விவாதித்துள்ளார்.

அந்த மாணவிக்கு விளக்கு ஒன்று வாங்கித் தந்து அவரது கல்வி தொடர உதவ வேண்டும் என்று முடிவு செய்தனர். அதுகுறித்து பள்ளியின் வழிபாட்டுக் கூட்டத்தில் தலைமை ஆசிரியர் சிவகளை தெரிவித்தார். அதையடுத்து மாணவர்கள் பலரும் தங்களால் முடிந்த பணத்தைக் கொடுத்து உதவ முன்வந்தனர். அவ்வாறு கிடைத்த பணம் போக மீதமுள்ள பணத்தைக் கொண்டு ஒரு சோலார் விளக்கு வாங்கி மாணவிக்கு கொடுத்தனர். இதன்மூலம் அந்த மாணவியின் படிப்பு நல்லவிதமாக தொடர்கிறது.
இதுகுறித்து வகுப்பு ஆசிரியர் சு.காந்திராஜ் கூறியதாவது: எங்கள் பள்ளியில் அனுஷ்கா உள்பட 10-க்கும் மேற்பட்ட இருளர் இனத்தைச் சேர்ந்த மாணவர்கள் பயில்கின்றனர். மாணவி அனுஷ்காவின் நிலையை எண்ணி அவருக்கு உதவ திட்டமிட்டோம். மாணவர்கள் யாரையும் பணம் தரும்படி கட் டாயப்படுத்தவில்லை. மாணவர்கள் பலரும் விரும்பி பணம் கொடுத்தனர். அதுபோக ஆசிரியர்கள் கொடுத்த பணத்தைக் கொண்டு ரூ.1,500 மதிப்புள்ள சோலார் விளக்கு வாங்கிக் கொடுத்தோம். சிறு துளி பெரு வெள்ளம் என்பார்கள்.
எங்களது இந்த சிறிய உதவி அந்த மாணவியின் கல்விப் பயணத்தில் பெரிய மாற்றத்தைக் கொடுக்கும் என நம்புகிறோம். அந்த மாணவியின் வீடு அமைந்திருக்கும் இடம் அரசு புறம்போக்கு நிலம் என்பதால்தான் மின் இணைப்பு வழங்கப்படவில்லை என்று தெரியவந்தது. இவ்வாறு ஆசிரியர் காந்திராஜ் தெரிவித்தார். இந்தப் பள்ளி ஆசிரியர்கள் இங்குபடித்த இருளர் இன மாணவர்கள் 2 பேர் திருப்புலிவனம் அரசு கல்லூரியில் படிக்க தொடர்ந்து உதவி வருகின்றனர்.
.
இதன்மூலம் ஆசிரியர்களுக்கு சிறந்த முன்உதாரணமாக இவர்கள் திகழ்கின்றனர். அனுஷ்கா போன்ற மாணவர்கள் ஆங்காங்கே சிரமத்தில் இருக்கத்தான் செய்கிறார்கள். அரசே எல்லாவற்றையும் செய்ய முடியாத நிலையில், பல்வேறு காரணங்களால் படிக்கமுடியாமல் சிரமப்படும் மாணவர்களுக்கு அந்தந்த பகுதி மக்கள், ஆசிரியர்கள், சக மாணவர்கள் உதவிக்கரம் நீட்டினால் எல்லோரும்கல்வி என்ற இலக்கை எட்டுவது நிச்சயம்.