`நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணைய அறிக்கையின்படி நடவடிக்கை எடுக்காமல் இருப்பது ஏன்?’ என்று சென்னை உயர் நீதிமன்றம், தமிழ்நாடு அரசிடம் விளக்கம் கேட்டிருப்பதன் மூலம், தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் ஆட்சி மாறியும், பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டிருப்பது தெரியவருகிறது.

போலீஸ் தாக்குதல்

தமிழக மக்களால் அவ்வளவு சீக்கிரத்தில் மறந்துவிட முடியாது, அந்தக் கொடுமையான சம்பவத்தை..!

2018, மே 22 தூத்துக்குடியின் கறுப்புநாள். சுற்றுச்சூழலை மாசுபடுத்திவந்த வேதாந்தாவின் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராகப் போராடிய மக்களில், 13 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். 100-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். ’தூத்துக்குடி’ என்றாலே துப்பாக்கிச்சுடு சம்பவம் நினைவுக்கு வரும் வகையில், வரலாற்றில் அழியாக்கறை படிந்துவிட்டது. இந்தத் துப்பாக்கிச்சூடு சம்பவம் ஏற்படுத்திய அதிர்வலைகளையடுத்து, மே 26-ல் ஆலை சீல் வைத்து மூடப்பட்டது

தூத்துக்குடி கலவரம்

இந்தச் சம்பவம் குறித்து சி.பி.ஐ ஒருபக்கம் விசாரிக்க, அப்போதைய அ.தி.மு.க ஆட்சிக்கு நெருக்கடி ஏற்பட்டதால், ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒருநபர் விசாரணை ஆணையம் இன்னொரு பக்கம் அமைக்கப்பட்டது.

மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக 36 கட்டங்களாக நடத்தப்பட்ட விசாரணையில், 1,426 பேருக்கு சம்மன் அனுப்பப்பட்டு, 1,048 பேர் நேரில் ஆஜராகி விளக்கமளித்தனர். 1,544 ஆவணங்கள் பதிவு செய்யப்பட்டன. 3,000-க்கும் மேற்பட்ட பக்கங்களைக் கொண்ட விசாரணை ஆணையத்தின் முழுமையான அறிக்கை, 2022, மே 18-ம் தேதி முதல்வர் ஸ்டாலினிடம் ஒப்படைக்கப்பட்டது. கடந்த ஆகஸ்ட் 18-ம் தேதி இறுதி அறிக்கையின் சில பகுதிகள் கசிந்தன.

அருணா ஜெகதீசன் ஆணைய அறிக்கை அரசிடம் சமர்பிப்பு

அதில், `யாருடைய உத்தரவும், தூண்டுதலுமின்றி துப்பாக்கிச்சூடுநடந்திருக்கிறது. தமிழ்நாடு இதுவரையிலும் கண்டிராத காவல்துறை நடவடிக்கைகளில் மிக மோசமான சம்பவம் இது’ எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.

“குற்றம்சாட்டப்பட்ட 17  பேர் உடனடியாகப் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு, அவர்கள்மீது குற்ற வழக்கு பதிவு செய்யப்படுவதுடன் சிறையில் அடைக்க வேண்டும்” என துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர்,   ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பு போராளிகள் உள்ளிட்டோர் அரசுக்குக் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து 19.10.22-ல் நடந்த சட்டமன்றக் கூட்டத்தொடரில் துப்பாக்கிச்சூடு தொடர்பான ஆணையத்தின் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டு, விவாதிக்கப்பட்டது. இருப்பினும், குற்றம்சாட்டப்பட்டவர்கள்மீது இதுவரை எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கொந்தளிக்கிறார்கள் ஸ்டெர்லைட் எதிர்ப்பாளர்கள்.

போலீஸ் துப்பாக்கிச்சூடு

ஸ்டெர்லைட் எதிர்ப்பு, தூத்துக்குடி மாவட்ட மக்கள் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் கிருஷ்ணமூர்த்தியிடம் பேசினோம். “கடந்த சட்டமன்றத் தேர்தல் பிரசாரத்தின்போது, தூத்துக்குடிக்கு வந்த முதல்வர் ஸ்டாலின், ‘அ.தி.மு.க-வும், பா.ஜ.க-வும் கூட்டுச்சேர்ந்து நடத்திய, பச்சைப் படுகொலைதான் துப்பாக்கிச்சூடு சம்பவம், குற்றம்சாட்டப்பட்டவர்கள்மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக தமிழக அரசு கொண்டுவந்திருக்கும் கொள்கை முடிவு கண்துடைப்பானது.

நாங்கள் ஆட்சிக்கு வந்தால் சிறப்புச் சட்டம் இயற்றி, ஸ்டெர்லைட்  ஆலையை நிரந்தரமாக அகற்றிட நடவடிக்கை எடுப்போம். துப்பாக்கிச்சூடு படுகொலைக்குக் காரணமானவர்கள் எவராக இருந்தாலும், எந்த உயர் பதவியில் இருந்தாலும், தண்டிக்கப்படுவார்கள்’ எனப் பேசினார். ஆனால், இதுவரை அவர்கள்மீது என்ன குற்றவியல் நடவடிக்கை பாய்ந்தது,தேர்தல் பிரசாரத்தில் பேசியது ஓட்டுக்கான வெறும் பேச்சுதானா?

தூத்துக்குடி கலவரம்

ஆணையத்தின் அறிக்கை  குறித்து வெளியிடப்பட்ட அரசாணையில், குற்றம்சாட்டப்பட்டவர்கள்மீது  துறைரீதியான நடவடிக்கை  மேற்கொள்ளப்பட்டுவருகிறது எனச் சொல்லப்பட்டிருக்கிறது. பல நூறு சாட்சிகளை விசாரித்து, சிசிடிவி கேமரா, பிரேத பரிசோதனை அறிக்கை, காயச் சான்றிதழ்கள் உள்ளிட்ட அனைத்து ஆவணங்களையும் பரிசீலனை செய்து, ஆணையத்தின் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டு, சம்பந்தப்பட்ட காவல்துறையினரை அடையாளம் காட்டியும், அரசு அதை ஏற்றுக்கொண்ட பிறகும், அவர்கள்மீது குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ள முதல்வர் தயங்குவது ஏன்?” என்றார்.

துப்பாக்கிச்சூட்டில் வாயில் சுடப்பட்டு உயிரிழந்த ஸ்னோலினின் தாயார் வனிதாவிடம் பேசினோம். ”துப்பாக்கிச்சூட்டுல சம்பந்தப்பட்ட எல்லா குற்றவாளிகளுக்கும் தண்டனை கிடைக்கும் நாள், எந்த நாளோ அந்த நாள்தான், என் மகள் உள்ளிட்ட 13 பேரின் இறப்புக்கு நீதி கிடைக்கும் நாள். சாத்தான்குளத்துல அப்பா, மகனை போலீஸ் ஸ்டேஷன்ல வெச்சு அடிச்சுக் கொலைசெஞ்ச 10 போலீஸ்காரங்களுமே இப்போ வரைக்கும் தண்டனை அனுபவிச்சிக்கிட்டு இருக்காங்க. சாத்தன்குளம் சம்பவத்துல கிடைச்ச நீதி, துப்பாக்கிச்சூடு சம்பவத்துல கிடைக்கலை. முதல்வர் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றணும்” என்றார் கண்ணீருடன்.  

கிருஷ்ணமூர்த்தி – வனிதா

இந்த வழக்கில் தற்போது உயர் நீதிமன்றம், தமிழ்நாடு அரசிடம் விளக்கம் கேட்கக் காரணமான மதுரை மக்கள் கண்காணிப்பக இயக்குநர் ஹென்றி டிபேனிடம் பேசினோம். “அருணா ஜெகதீசன் அறிக்கையின் அடிப்படையில் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்று நீதிபதிகள் கேள்வி எழுப்ப, தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் மீது தொடர்ந்த வழக்குதான் காரணம். தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு விசாரணையை, சம்பவம் நடந்த அதே ஆண்டில் சூமோட்டோவாக விசாரணைக்கு எடுத்துக்கொண்ட தேசிய மனித உரிமைகள் ஆணையம் (NHRC), தமிழ்நாடு அரசால் கொடுக்கப்பட்ட விளக்கத்தை ஏற்றுக்கொண்டு, ஐந்து மாதங்களில் விசாரணையை முடித்துக்கொண்டது.

நான் தனியாகவும் தேசிய மனித உரிமைகள் ஆணையத்தில் புகார் செய்திருந்தது குறித்துக் கேட்டதற்கு, சூமோட்டோவாக எடுக்கப்பட்டு முடிக்கப்பட்ட வழக்கில், என் புகாரை இணைத்திருந்ததால், வழக்கு க்ளோஸ் செய்யப்பட்டது என்று தெரிவித்தார்கள். எனக்குத் தெரிவிக்காமல் எப்படி வழக்கை முடிக்கலாம் என்றேன். அது மட்டுமின்றி என்.ஹெச்.ஆர்.சி மூலம் தூத்துக்குடிக்கு அனுப்பிய விசாரணைக்குழுவின் அறிக்கையையும் எனக்குத் தரவில்லை. வழக்கு முடிக்கப்பட்டது ஏன் என்றதற்கு, `பாதிக்கப்பட்டவர்களுக்கு தமிழ்நாடு அரசு இழப்பீடு வழங்கிவிட்டது, வழக்கை சி.பி.ஐ விசாரித்துவருகிறது, அருணா ஜெகதீசன் ஆணையம் அமைக்கப்பட்டிருக்கிறது, தூத்துக்குடியில் அமைதி நிலவுகிறது’ என்று அரசு கூறிய விளக்கத்தை எனக்கு பதிலாகக் கொடுத்தார்கள்.

ஹென்றி டிபேன்

என் புகாரின் அடிப்படையில் விசாரணையை மீண்டும் நடத்த வேண்டும் என்று தேசிய மனித உரிமைகள் ஆணையத்துக்கு பலமுறை நினைவூட்டியும், இரண்டு ஆண்டுகளாக அவர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. 2020-ல் உயர் நீதிமன்றத்தில் நான் வழக்கு தொடர்ந்தேன். `ஐந்து மாதங்களில் ஒரு வழக்கை க்ளோஸ் செய்வதா?’ என்று ஆதங்கப்பட்ட உயர் நீதிமன்றம், தேசிய மனித உரிமைகள் ஆணையத்திடம் விளக்கம் கேட்டது. அதோடு அவர்களின் விசாரணைக்குழு நடத்திய விசாரணை அறிக்கையை எனக்கு வழங்க உத்தரவிட்டதுடன், க்ளோஸ் செய்த வழக்கை மீண்டும் விசாரணை செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டது. ஆனால், மீண்டும் எனக்கோ, அரசுக்கோ முறையாக நோட்டீஸ் கொடுக்காமல், வழக்கை முடிப்பதாகத் தெரிவித்தார்கள்.

அரசு கொடுத்த விளக்கத்தின் அடிப்படையில், ஐந்து மாதங்களில் சூமோட்டோவாக எடுத்த வழக்கை முடித்த தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின்மீதான வழக்கு விசாரணையின்போதுதான், சி.பி.ஐ விசாரித்துவருவதையும், அருணா ஜெகதீசன் ஆணையம் விசாரணை நடத்தி ஐ.ஜி., டி.ஐ.ஜி., எஸ்.பி., ஏடி.எஸ்.பி உள்ளிட்டவர்கள்மீது நடவடிக்கை எடுக்கப் பரிந்துரை செய்திருப்பதையும் சுட்டிக்காட்டினேன். 2022-ல் சமர்ப்பிக்கப்பட்ட அருணா ஜெகதீசனின் முழுமையான விசாரணை அறிக்கையை, தமிழக அரசு ஏற்றுக்கொண்டு அரசாணையும் வெளியிட்டது.  

தூத்துக்குடி கலவரம்

இழப்பீடு வழங்கிய தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என்பதை நீதிமன்றத்தில் தெரிவித்தேன். சி.பி.ஐ-யோ விசாரணையில் ஒரேயொரு இன்ஸ்பெக்டரைத்தான் குற்றவாளியாகக் காட்டியிருக்கிறது. அதனால், சிறப்புப் புலனாய்வுக்குழுவை நியமிக்க நீதிமன்றத்தில் கோரிக்கை வைத்திருக்கிறேன். ஆணைய அறிக்கையை நிறைவேற்ற தமிழக அரசின் நிலைப்பாடு என்ன என்பதைத்தான் தற்போது நீதிமன்றம் கேள்வியாக முன்வைத்திருக்கிறது” என்றார்.

தமிழக அரசு அளிக்கும் விளக்கத்தில்தான், துப்பாக்கிச்சூட்டில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்குமா என்பது தெரியவரும்!

Source link

By Admin S

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: