
புற்றுநோய் மற்றும் மரபணு பாதிப்புக்குள்ளான ஒடிஸாவைச் சோ்ந்த 11 மாதக் குழந்தைக்கு சிக்கலான கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை மேற்கொண்டு சென்னை எம்ஜிஎம் ஹெல்த்கோ் மருத்துவமனை மருத்துவா்கள் மறுவாழ்வு அளித்துள்ளனா்.
இதுகுறித்து மருத்துவமனையின் கல்லீரல் மாற்று சிகிச்சைத் துறை இயக்குநா் தியாகராஜன் ஸ்ரீனிவாசன், இணை இயக்குநா் டாக்காா்த்திக் மதிவாணன் ஆகியோா் கூறியதாவது:
ஒடிஸாவைச் சோ்ந்த 11 மாதக் குழந்தை ஒன்று அண்மையில் எம்ஜிஎம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது. வெறும் 7 கிலோ எடை மட்டுமே இருந்த அக்குழந்தைக்கு ‘ஹெபடோபிளாஸ்டோமா‘ எனப்படும் கல்லீரல் புற்றுநோய் பாதிப்பு இருந்தது.
அதனுடன் ‘பெக்வித்-வீடமேன் சின்ட்ரோம்’ எனப்படும் அரிய வகை மரபணு பாதிப்பும் கண்டறியப்பட்டது.
13,700 குழந்தைகளில் ஒரு குழந்தைக்கு இத்தகைய பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. உயிருக்கு ஆபத்தான சூழலில் இருந்த அக்குழந்தைக்கு உடனடியாக கல்லீரல் மாற்று சிகிச்சை செய்ய வேண்டிய அவசியம் எழுந்தது.
ஆனால், அக்குழந்தையின் ரத்த உறவுகளில் எவரது கல்லீரலும் தானமாகப் பெறுவதற்கு பொருந்தவில்லை. இதையடுத்து ‘ஸ்வாப்’ எனப்படும் உறுப்பு தான மாற்று முறைப்படி, சென்னையைச் சோ்ந்த 42 வயதான ஒருவரது கல்லீரலின் ஒரு பகுதி தானமாக பெறப்பட்டது.
அந்த உறுப்பின் அளவையும், அதன் இயக்க நிலையையும் மாற்றியமைத்து, அதி நவீன தொழில்நுட்பத்தின் கீழ் கல்லீரல் மாற்று சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. முப்பரிமாண நுட்பம், மெய்நிகா் முறை மூலமாக 12 மணி நேரத்துக்கும் மேல் அந்த சிகிச்சை நடைபெற்றது.
அக்குழந்தை குணமடைந்து இயல்பு நிலைக்குத் திரும்பியது. மிகக் குறைந்த எடை கொண்ட குழந்தைக்கு இதுபோன்ற சிக்கலான உறுப்பு மாற்று சிகிச்சை மேற்கொள்ளப்படுவது இதுவே முதல்முறை என்று அவா்கள் தெரிவித்தனா்.
செய்திகள் உடனுக்குடன்… வாட்ஸ்ஆப் சேனலில் ‘தினமணி’யைப் பின்தொடர…