சேலம்: ஐப்பசி மாத அமாவாசையை யொட்டி, ஆயிரங்கண்ணுடையாள் அலங்காரத்தில் அருள்பாலித்த சேலம் கோட்டை பெரிய மாரியம்மனை, பக்தர்கள் ஏராளமானோர் குடும்பத்துடன் வந்திருந்து நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசித்தனர். சேலத்தின் பிரசித்தி பெற்ற கோட்டை பெரிய மாரியம்மன் கோயிலின் கும்பாபிஷேகம் கடந்த 27-ம் தேதி கோலாகலமாக நடைபெற்றது. தற்போது மண்டல பூஜை நடைபெற்று வருகிறது. கும்பாபிஷேகத்துக்குப் பின்னர், கோட்டை பெரிய மாரியம்மன் கோயிலுக்கு பக்தர்கள் தினமும் அதிக எண்ணிக்கையிலானோர் வந்து தரிசித்து செல்கின்றனர். மேலும், வெள்ளிக்கிழமைகளில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருக்கிறது.
இந்நிலையில், கும்பாபி ஷேகத்துக்குப் பின்னர் வந்த முதல் அமாவாசை தினம் என்பதால், சேலம் கோட்டை பெரிய மாரியம்மனுக்கு நேற்று சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் நடைபெற்றன. பின்னர், அம்மனுக்கு ஆயிரங் கண்ணுடையாள் அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. அம்மனுக்கு உகந்த அமாவாசை தினமாக நேற்று அமைந்த நிலையில், ஆயிரங் கண்ணுடையாள் அலங்காரத்தில் எழுந்தருளிய கோட்டை பெரிய மாரியம்மனை தரிசிப்பதற்கு, பக்தர்கள் ஆயிரக்கணக்கில் கோயிலுக்கு வந்தனர்.
குறிப்பாக, தீபாவளியை ஒட்டி, நேற்று அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், கோயிலில் வழிபாடு நடத்திட பக்தர்கள் பலர் குடும்பத்தினருடன் அதிக எண்ணிக்கையில் வந்திருந்தனர். இதனால், நீண்ட வரிசையில் காத்திருந்து பக்தர்கள் கோட்டை பெரிய மாரியம்மனை தரிசித்தனர்.