ராஜபாளையம்: ராஜபாளையத்தில் இனிப்பு கடை உரிமையாளர் கொலையில் அவரது இரண்டாவது மனைவி உட்பட 4 பேரை போலீஸார் கைது செய்தனர்.
ராஜபாளையம் சுப்புராஜாமடம் தெருவைச் சேர்ந்த குருசாமி மகன் சிவகுமார் (43). இவர் ராஜபாளையம் பழைய பேருந்து நிலையம் எதிரே இனிப்புகடை நடந்தி வந்தார்.மேலும் சென்னையில் உள்ள தனது தந்தையின் தொண்டு நிறுவனத்தையும் கவனித்து வந்தார். இவருக்கு கீழராஜ குலராமன் பகுதியைச் சேர்ந்த சாந்தி என்பவருடன் திருமணமாகி ஒரு மகன் உள்ள நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்தனர்.
பின்னர் சிவகுமார் தனது ஸ்வீட் கடையில் வேலை பார்த்த தென்காசி மாவட்டம் சிவகிரி அருகேயுள்ள தேவிபட்டினம் பகுதியைச் சேர்ந்த காளீஸ்வரி (23) என்பவரை கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு குரு சக்தி (3) என்ற மகன் உள்ளார். தீபாவளியன்று சஞ்சீவி மலை அடிவாரத்தில் உள்ள தோட்டத்துக்குச் சென்ற போது, மனைவி மற்றும் மகனின் கண் முன்னே சிவகுமார் குத்திக் கொலை செய்யப்பட்டார்.
போலீஸார் விசாரணையில் காளீஸ்வரி மற்றும் அவரது வீட்டில் வசிக்கும் ஐயப்பன் (28) என்பவருடன் சேர்ந்து சிவகுமாரை கொலை செய்தது தெரிய வந்தது. காளீஸ்வரி, ஐயப்பன் மற்றும் அவரது நண்பர்களான மாடசாமி கோயில் தெருவைச் சேர்ந்த விக்னேஷ்வரன் (26), ஆப்பனூரைச் சேர்ந்த மருது பாண்டியன் (27) ஆகியோரை போலீஸார் கைது செய்தனர்.
இது குறித்து போலீஸார் கூறியதாவது: கணவரின் நடத்தையில் காளீஸ்வரிக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. மேலும், ‘ஐயப்பன், சிவகுமாரின் வீட்டில் வாடகைக்குக் குடியிருந்தார். ஐயப்பனுக்கு வேலை வாங்கித் தருவதாகக் கூறி சிவகுமார் ரூ.6 லட்சம் வரை பணம் பெற்றுள்ளார். ஆனால், வேலை வாங்கித் தரவில்லை. இதனால், சிவகுமார் மீது ஐயப்பன் கோபத்தில் இருந் துள்ளார்.
.
இதையடுத்து ஐயப்பன், காளீஸ்வரியுடன் சேர்ந்து சிவகுமாரை கொலை செய்ய முடிவு செய்துள்ளார். தீபாவளியன்று காளீஸ்வரி, சிவகுமாரை சஞ்சீவி மலையடிவாரத்துக்கு அழைத்து வர, அங்கு காத்திருந்த ஐயப்பனின் நண்பர்களான விக்னேஷ்வரன், மருது பாண்டி ஆகியோர் சிவ குமாரை கொலை செய்துள்ளனர். அடுத்த கட்ட விசாரணையில் முழு விவரமும் தெரியவரும். இவ்வாறு போலீஸார் தெரிவித்தனர்.