கூடுவாஞ்சேரி: கூடுவாஞ்சேரியில் இருவருக்குள் நடந்த முன்விரோதம் காரணமாக ஒருவர் கொலை செய்யப்பட்டார். கொலை செய்தவருக்கும் வெட்டு காயம் ஏற்பட்டு, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். செங்கல்பட்டு மாவட்டம் நந்திவரம் கூடுவாஞ்சேரி திருவிக தெருவில் ஒருவருக்கொருவர் அரிவாளால் வெட்டிக் கொண்டு சண்டை போட்டுக் கொண்டுள்ளனர். அதில் ஒருவர் கழிவுநீர் கால்வாயில் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்துள்ளார். ஒருவர் தப்பியோடி விட்டதாக அப்பகுதி மக்கள் கூடுவாஞ்சேரி காவல் நிலையத்துக்கு தகவல் கொடுத்துள்ளனர்.
அதன் அடிப்படையில் சம்பவ இடத்துக்கு போலீஸார் விரைந்து சென்று, கழிவுநீர் கால்வாயில் விழுந்தவர் உடலை செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். அப்பகுதி மக்களிடம் போலீஸார் நடத்திய விசாரணையில் தீபாவளி தினத்தில் இரண்டு இளைஞர்கள் மோதிக்கொண்டது தெரியவந்தது. இறந்து போன நபர் கூடுவாஞ்சேரியை அடுத்த தைலாவரம் பகுதியை சேர்ந்த கிருஷ்ணன் என்பவரின் மகன் கோபால கண்ணன் (26) என்பதும், இவர் மீது வாகனத் திருட்டு, கொலை முயற்சி உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளதும் தெரியவந்தது.
இதற்கிடையே கூடுவாஞ்சேரியில் உள்ள தனியார் மருத்துவமனையில் இருந்து கையில் வெட்டுக் காயங்களுடன் ஒருவர் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காவல்துறைக்கு தகவல் கிடைத்தது. உடனடியாக மருத்துவமனை சென்ற போலீஸார் அந்த நபரிடம் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் அவர், கூடுவாஞ்சேரி நந்திவரம் பிள்ளையார் கோயில் தெருவை சேர்ந்த சந்திரன் என்பவரது மகன் கன்னியப்பன் (26) என்பது தெரியவந்தது.
தான் அப்பகுதியில் நடந்து வந்தபோது கோபால கண்ணன் தன்னை அரிவாளால் வெட்டியதாகவும், அவரிடம் இருந்து தன்னை காப்பாற்றிக் கொள்வதற்காக, அவரிடமிருந்த அரிவாளைப் பிடுங்கி அவரை 4 முறை வெட்டியதாகவும், அவர் கால்வாயில் விழுந்துவிட்டதால், அங்கிருந்து தான் தப்பித்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் கன்னியப்பன் போலீஸாரிடம் தெரிவித்துள்ளார். கன்னியப்பனிடம் போலீஸார் மேலும் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முன்விரோதம் காரணமாக இந்த கொலை நடந்ததாக கூறப்படுகிறது.