சுதந்திரப் போராட்ட வீரரும், தகைசால் தமிழர் விருதுபெற்ற மூத்த கம்யூனிஸ்ட் தலைவருமான தோழர் என்.சங்கரய்யா, வயது மூப்பு காரணமாக இன்று காலமானார். அவரின் மறைவுக்கு அரசியல் தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். முதல்வர் ஸ்டாலின், அமைச்சர்கள் துரைமுருகன், பொன்முடி, எம்.பி-க்கள் டி.ஆர்.பாலு, ஆ.ராசா உட்பட தி.மு.க தலைவர்கள் பலர், குரோம்பேட்டையிலுள்ள சங்கரய்யாவின் இல்லத்துக்கு நேரில் சென்று அவரின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். இந்த நிலையில், `தியாகி சங்கரய்யாவுக்கு அரசு மரியாதையுடன் பிரியாவிடை அளிக்கப்படும்” என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்திருக்கிறார்.

இது குறித்து முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், `தகைசால் தமிழர், முதுபெரும் பொதுவுடைமைப் போராளி, விடுதலைப் போராட்ட வீரர் தோழர் என்.சங்கரய்யா மறைந்த செய்தியால், துடிதுடித்துப் போனேன். மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த அவர் நலம் பெற்றுவிடுவார் என்றே நம்பியிருந்த வேளையில், அவர் மறைந்த செய்தி அதிர்ச்சியையும் வேதனையையும் அளித்தது.