இரண்டு நாள்களுக்கு முன்புவரை இங்கிலாந்து நாட்டின் உள்துறை அமைச்சராக இருந்த இந்திய வம்சாவளி பெண் சுயெல்லா பிராவர்மேன், கடந்த திங்களன்று பிரதமர் ரிஷி சுனக்கால் அந்தப் பதவியிலிருந்து பதவிநீக்கம் செய்யப்பட்டார். `பாலஸ்தீன ஆதரவாளர்களின் போராட்டங்களை சரிவர கட்டுப்படுத்தாத இங்கிலாந்து போலீஸ், வலதுசாரி குழுக்களிடம் மட்டும் அதற்கு நேரெதிராக நடந்துகொள்கிறது, இரட்டை வேடம் போடுகிறது’ என சுயெல்லா பிராவர்மேன் கூறியதன் பின்னணியில், அவரின் சொந்தக் கட்சியினரே ரிஷி சுனக் மீது அழுத்தம் தந்ததன் விளைவாக இத்தகைய முடிவெடுக்கப்பட்டிருக்கிறது.

இன்னொருபக்கம், சுயெல்லா பிராவர்மேன் பதவிநீக்கம்செய்யப்பட்ட அடுத்த நாளே எம்.பி ஆண்ட்ரியா ஜென்கின்ஸ், ரிஷி சுனக்குக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானத்தைக் கொண்டுவர கோரிக்கை வைத்தார். இந்த நிலையில், `நீங்கள் செய்தது எனக்கான துரோகமல்ல அல்ல, நாட்டுக்கு செயத துரோகம்’ என்று ரிஷி சுனக்குக்கு சுயெல்லா பிராவர்மேன் கடிதம் அனுப்பியிருக்கிறார்.
அந்தக் கடிதத்தில், “தலைமைப் போட்டியின் போது பெரும்பான்மையான கட்சி உறுப்பினர்களால் நீங்கள் நிராகரிக்கப்பட்டிருந்தாலும், பிரதமராக இருக்க தனிப்பட்ட ஆணை இல்லாவிட்டாலும், முக்கியமான கொள்கைகளில் நீங்கள் எனக்கு அளித்த உறுதியான உத்தரவாதத்தின் காரணமாகவே நான் உங்களை ஆதரிக்க ஒப்புக்கொண்டேன். இந்த முக்கியக் கொள்கைகள் ஒவ்வொன்றையும் நீங்கள் வழங்கத் தவறிவிட்டீர்கள். இதை நீங்கள் நிராகரித்ததது, நம்முடைய ஒப்பந்தத்துக்கு செய்த துரோகம் அல்ல, நாட்டுக்காக என்ன வேண்டுமானாலும் செய்வேன் என்று இந்த நாட்டுக்கு நீங்கள் அளித்த வாக்குறுதிக்கு செய்த துரோகம். நீங்கள் இவ்வாறு செய்தது, உங்களின் தனித்துவமான அரசாங்க பாணியில் உங்களால் கொடுத்த வாக்குறுதியை செய்ய இயலாது என்று அர்த்தம், அல்லது நான் இப்போது உறுதியாகக் கூறுவது போல, நீங்கள் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றும் எண்ணம் உங்களுக்கு இருந்ததில்லை என்று அர்த்தம்.

யாராவது ஒருவராவது நேர்மையாக இருக்க வேண்டும். உங்கள் திட்டம் வேலை செய்யவில்லை. கடினமான முடிவுகள் எடுப்பதைத் தவிர்ப்பதற்கு ஒரு ஆறுதல் போர்வையாக, உங்களுக்கு விருப்பமானதை நீங்கள் தேர்ந்தெடுத்திருக்கிறீர்கள். இந்த பொறுப்பின்மை நேரத்தை வீணடித்து, நாட்டைச் சாத்தியமற்ற நிலையில் விட்டுச் சென்றுவிட்டது” என்று ரிஷி சுனக்கை சுயெல்லா பிராவர்மேன் குறிப்பிட்டிருக்கிறார்.
இதில், ரிஷி சுனக் தனக்கு கொடுத்த உத்தரவாதங்களாக சுயெல்லா பிராவர்மேன் கூறுவது, சட்டவிரோத புலம்பெயர்வைக் குறைத்தல், புலம்பெயர் படகுகள் ஆங்கிலக் கால்வாயைக் கடப்பதைத் தடுத்தல், உயிரியல் பாலினத்தைப் பாதுகாத்தல் போன்றவை அடங்கும்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/46c3KEk
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.