புதுச்சேரி: பழங்குடியின மக்களை இழிவுப்படுத்தி, மனித உரிமை மீறல் செய்துள்ளதாக புதுச்சேரி அரசு மீது எதிர்க்கட்சித் தலைவர் சிவா குற்றம் சாட்டியுள்ளார்.
புதுச்சேரி ஆளுநர் தமிழிசை பங்கேற்ற அரசு விழாவில் பழங்குடியின மக்கள் தரையில் அமரவைக்கப்பட்டது தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் சிவா இன்று வெளியிட்ட அறிக்கையில்: “புதுச்சேரி நிர்வாகத்தை சீர்கெட விட்டு விட்டு மத்திய பாஜக அரசின் விளம்பரதாரராக மாறி இது போன்ற நிகழ்ச்சிகள் மூலம் பாஜக–வை வளர்க்கும் நோக்கில் ஆளுநர் தமிழிசை செயல்படுவது அவரது பதவிக்கு அழகல்ல.
அதற்காக ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையை பகடைக்காயாக மாற்றி உள்ளது ஏற்புடையதல்ல. பழங்குடி மக்களுக்காக ஒதுக்கப்பட்ட நிதியை இத்துறை முறையாக செலவு செய்திருந்தால் வீடற்று மழையில் தவித்துக் கொண்டிருக்கும் மக்களுக்கு மனையும், வீடும் கிடைத்திருக்கும்.
தொழில் கடன்கள் வளர்ந்திருக்கும். கல்வியில் அவர்கள் முன்னேறி இருப்பர். ஆனால் இன்றைக்கும் போராடி கொண்டிருக்கும் அம்மக்களை நடுவீதியில் தவிக்க விட்டு விட்டு விழாவுக்காக அவர்களை கூட்டி வந்து கவுரவம் என்ற பெயரிலே விழாவிற்கு வந்த விருந்தினர்கள் எல்லாம் நாற்காலியில் அமர்ந்திருக்க நடைபாதையில் அம்மக்களை உட்கார வைத்து அவமானப்படுத்தியது தான் பாஜக – என்.ஆர். காங்கிரஸ் கூட்டணி அரசின் கலாச்சாரமா? பழங்குடியினர் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின்படி இச்செயல் தீண்டாமை குற்றமாகும்.
இது மனித உரிமை மீறல். ஒரு அரசே தீண்டாமை குற்றத்தை செய்வது நியாயமா. இதில் யார் மீது வழக்கு தொடுப்பது?. புதுச்சேரி மாநில பழங்குடி மக்களை ஏமாற்ற நினைக்கும் புதுச்சேரி அரசை வன்மையாக கண்டிக்கிறோம். புதுச்சேரி பழங்குடி மக்களின் 30 ஆண்டுகால போராட்டத்தின் விளைவுதான் பழங்குடியினர்களில் சில பிரிவுகளுக்கு மட்டும் பழங்குடி தகுதி கிடைத்திருக்கிறது. இன்னும் சில பிரிவினர் போராட்டத்தை தொடர்ந்து கொண்டிருக்கிறார்கள்.
.

அவர்களை இந்த பட்டியலில் சேர்ப்பதற்கு நடவடிக்கை எடுங்கள். புதுச்சேரியில் உள்ள நரிக்குறவர்களையும் அந்த பட்டியலில் கொண்டுவர நடவடிக்கை எடுங்கள். அரசின் பட்ஜெட்டில் ஒரு சதவீத தொகை பழங்குடியின மக்களின் சிறப்புக் கூறு திட்டத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ளது. அதில் முறையாக திட்டமிட்டு அவர்களின் தேவையை பூர்த்தி செய்ய முயலுங்கள். அதைவிடுத்து மோடி என்ற தனி மனிதரின் விளம்பரத்துக்காக பழங்குடியின மக்களை மேலும் ஏமாற்றாதீர்கள்.” என சிவா கூறினார்.