இஸ்ரேல் – ஹமாஸ் மத்தியில் கடந்த ஒரு மாதத்தைக் கடந்தும் தொடரும் போரில், காஸாவில் மட்டும் 11,200-க்கும் மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள். இவர்களில் 4,100-க்கும் மேற்பட்டவர்கள் குழந்தைகள். உணவு, தண்ணீர், மருத்துவ வசதி, எரிபொருள், மின்சாரம் போன்ற அடிப்படை வசதிகளின்றி, காஸா பகுதி மக்கள் பெரும் சோகத்தை எதிர்கொண்டுவருகின்றனர். இதற்கிடையில், இஸ்ரேலின் இந்தத் தாக்குதலைக் கண்டித்து, ஐ,நா., உலக சுகாதார அமைப்பு உள்ளிட்ட சர்வதேச அமைப்புகளும் தங்களின் கடுமையான கண்டனங்களைத் தெரிவித்து, போர் நிறுத்தத்துக்கு அழைப்புவிடுத்தன.

அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ், ரஷ்யா உள்ளிட்ட வல்லரசு நாடுகளிலும், இரான், சிரியா, உள்ளிட்ட பல உலக நாடுகளிலும் பெரும் திரளான மக்கள் இஸ்ரேலைக் கண்டித்தும், உடனடியாக போர் நிறுத்தத்தை வலியுறுத்தியும் போராட்டம் நடத்திவருகின்றனர். ஹமாஸ் குழு மருத்துவமனைகளுக்குக் கீழே தங்கியிருப்பதாகக் கூறி, பெருமளவில் மருத்துவமனைகளைச் சேதப்படுத்துகிறது இஸ்ரேல்.
இந்த நிலையில்தான், அமெரிக்க அதிபர் ஜோ பைடன் செய்தியாளர்களிடம், “காஸாவின் பிரதான மருத்துவமனைகள் பாதுகாக்கப்பட வேண்டும். காஸாவில் இருக்கும் அல் ஷிஃபா மருத்துவமனை வளாகத்தில் இஸ்ரேலின் மனிதாபிமானமற்ற தாக்குதலால், நூற்றுக்கணக்கான மக்கள் சிக்கித் தவிப்பதாக உலக மருத்துவத் தொண்டுக் குழுவான MSF தெரிவித்திருக்கிறது.

மருத்துவமனைகளில் போர் நடப்பதை நாங்கள் பார்க்க விரும்பவில்லை. நாங்கள் நோயாளிகளைப் பாதுகாக்கவும், மருத்துவமனைகள் பாதுகாக்கப்படுவதையும் விரும்புகிறோம். நாங்கள் இது குறித்து இஸ்ரேல் அரசுடன் பேசியிருக்கிறோம். எனவே, மருத்துவமனைகள்மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தாது என நம்புகிறேன்” எனக் குறிப்பிட்டிருந்தார். தொடர்ந்து காஸா பகுதியில் பொதுமக்கள் இறப்பதைத் தவிர்க்க முயல்வது குறித்து, அதிபர் ஜோ பைடனும், அமெரிக்க அதிகாரிகளும் இஸ்ரேலை எச்சரித்துப் பேசி வருகின்றனர்.
ஆனால், அதே நேரம், இன்னொரு பக்கம் இஸ்ரேலுக்கு ராணுவ உதவியை அதிகரித்திருக்கும் அதிர்ச்சித் தகவலும் வெளியாகியிருக்கிறது. இந்த தகவல் குறித்து செய்தி வெளியிட்டிருக்கும் ப்ளூம்பெர்க் செய்தி நிறுவனம், “இஸ்ரேலுக்கு அமெரிக்காவின் அதன் சிறப்பு ஆயுதமான அப்பாச்சி கன்ஷிப், கடற்படைக்கான லேசர்-வழிகாட்டப்பட்ட ஏவுகணைகள், அத்துடன் 155 மி.மீ குண்டுகள், இரவு நேரத்தில் எதிரிகளைத் துல்லியமாகப் பார்க்கப் பயன்படுத்தப்படும் பார்வைச் சாதனங்கள், பதுங்குக் குழியை வெடிக்க வைக்கும் ஆயுதங்கள், புதிய ராணுவ வாகனங்கள் ஆகியவற்றை அமெரிக்கா அனுப்பியிருக்கிறது.

கடந்த மாத இறுதியில், 36,000 ரவுண்டுகள் உள்ள 30 மி.மீ பீரங்கி வெடிப்பொருள்கள், 1,800 M141 பதுங்குக் குழி `பஸ்டர்’ வெடிமருந்துகள், 3,500 இரவு பார்வைச் சாதனங்கள் வழங்கப்பட்டிருக்கின்றன. மேலும், இந்த ஆயுத உதவி தினசரி அடிப்படையில் தொடர்ந்து செய்யப்படுகிறது. கடந்த திங்கள்கிழமை 30-க்கும் மேற்பட்ட நிவாரண அமைப்புகள், அமெரிக்கப் பாதுகாப்புச் செயலாளர் லாயிட் ஆஸ்டினுக்கு, `155 மி.மீ குண்டுகளை அனுப்ப வேண்டாம். 155 மி.மீ பீரங்கி குண்டுகள் அதிக மக்கள்தொகை கொண்ட இடங்களில் ஒன்றான காஸாவில் கண்மூடித்தனமான உயிர்ப்பலியை ஏற்படுத்தும்.
இந்த வெடிமருந்துகள் சரியாக வழிகாட்டப்படாதவை. எனவே, அதிக உயிர்பலிக்கான சூழல் ஏற்படும் வாய்ப்புகள் அதிகம்’ என்று வலியுறுத்தி கடிதம் எழுதியிருக்கின்றன. இதற்கிடையில், இஸ்ரேல் 57,000-க்கும் மேற்பட்ட 155 மி.மீ வெடிக்கும் பீரங்கி குண்டுகள், 20,000 M4A1 துப்பாக்கிகள், 5,000 PVS-14 இரவு பார்வைச் சாதனங்கள், 3,000 M141 கையடக்க பதுங்குக் குழி வெடிகுண்டுகள் ஆகியவற்றைக் கேட்டிருக்கின்றன” எனக் குறிப்பிட்டிருக்கிறது.

இதே போன்றுதான் ரஷ்யா – உக்ரைன் போரின்போது 2 மில்லியனுக்கும் அதிகமான 155 மி.மீ குண்டுகளையும், 105 மி.மீ ரவுண்டு 8,00,000 பீரங்கிகளையும் உக்ரைனுக்கு அமெரிக்கா வழங்கியிருக்கிறது என அமெரிக்க வெளியுறவுத்துறை தெரிவித்தது கவனத்தில் கொள்ளத்தக்கது.