மும்பை: மகாதேவ் சூதாட்ட செயலி விவகாரத்தில் டாபர் குழுமத்தின் இயக்குநர் கௌரவ் பர்மன், தலைவர் மோஹித் பர்மன் உள்பட 32 பேர்மீது மும்பை போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். மோசடி மற்றும் சூதாட்டம் ஆகிய பல்வேறு பிரிவுகளின் கீழ் அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
மும்பை போலீஸார் பதிந்துள்ள முதல் தகவல் அறிக்கையில், கௌரவ் பர்மன் 1-6வது குற்றம்சாட்டப்பட்ட நபராகவும், மோஹித் பர்மன் 18-வது குற்றம்சாட்டப்பட்ட நபராகவும் சேர்க்கப்பட்டுள்ளனர். இந்த வழக்கில் மொத்தம் 32 பேர் சம்பந்தப்பட்டுள்ளனர் என எஃப்ஐஆரில் கூறப்பட்டுள்ள நிலையில், அவர்களில் 31 பேரின் பெயர்கள் அதில் இடம்பெற்றுள்ளன. 32-வது நபராக பெயர் தெரியாத ஒருவர் குற்றத்தில் ஈடுபட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இவர்கள் அனைவரின் மீதும் ஐபிசி 420, 465, 467, 468, 471, மற்றும் 120 (பி) ஆகிய பிரிவுகளின் கீழ் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
பிரபல யூடியூபரும் நடிகருமான சாஹில் கான் 26-வது குற்றம்சாட்டப்பட்ட நபராக சேர்க்கப்பட்டுள்ளார். இவர் மகாதேவ் சூதாட்ட செயலியுடன் தொடர்புடைய மற்றொரு சூதாட்ட செயலியை நடத்தியதுடன், அவற்றில் இருந்து மிகப் பெரிய தொகையை வருமானமாக ஈட்டினார் எனக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
பின்னணி: சத்தீஸ்கரை சேர்ந்தவர் சவுரப் சந்திரகர். இவர் சத்தீஸ்கரின் பிலாய்பகுதியில் பழச்சாறு கடை நடத்திவந்தார். இவர் நண்பர் ரவி உப்பால்.இவர் டயர் கடை நடத்தி வந்தார். கடந்த 2018-ம் ஆண்டில் இருவரும் துபாய் சென்றனர். அங்கு மகாதேவ் என்ற பெயரில் சூதாட்ட செயலியை உருவாக்கினர். இதன்படி போக்கர், கார்டு கேம்ஸ், டென்னிஸ், கிரிக்கெட், பாட்மிண்டன், கால்பந்து உள்ளிட்ட பல்வேறு விளையாட்டுகளின் பெயரில் சூதாட்டம் நடத்தப்பட்டது.
இந்தியாவில் நடைபெறும் தேர்தல்களில் யார் வெற்றி பெறுவார்கள் என்பது குறித்தும் இந்தச் செயலி வாயிலாக சூதாட்டம் நடைபெற்றிருக்கிறது. கடந்த பிப்ரவரியில் மகாதேவ் செயலியின் உரிமையாளர் சவுரப் சந்திரகரின் திருமணம் துபாயில் நடைபெற்றது. இதற்காக ரூ.260 கோடி செலவிடப்பட்டது. இந்த திருமண விழாவில் பாலிவுட் நடிகர், நடிகைகள் பலர் பங்கேற்றனர். அவர்களுக்கு ஹவாலா முறையில் பெரும் தொகை கைமாறியதாகக் கூறப்படுகிறது.
கடந்த ஆண்டு செப்டம்பரில் சவுரப் சந்திரகர் சார்பில் துபாயில் விருந்து அளிக்கப்பட்டது. அதில் பெரும்பாலான நடிகர், நடிகைகள் பங்கேற்றனர். அவர்களுக்கு தலா ரூ.40 கோடி அளிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. துபாயில் நடைபெற்ற சவுரப் சந்திரகரின் திருமணம் மூலம் மகாதேவ் செயலி குறித்தும் அந்த செயலி வாயிலாக ரூ.5,000 கோடி அளவுக்கு மோசடி நடைபெற்றிருப்பதாகவும் தெரிவித்த அமலாக்கத் துறை, மகாதேவ் சூதாட்ட செயலி நிறுவனத்திடம் இருந்து சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகல் ரூ.508 கோடி பெற்றதாக அசிம் தாஸ் என்ற பணப் பரிமாற்றம் செய்பவரிடமிருந்து வாக்குமூலம் பெற்றிருப்பதாக குற்றம்சாட்டியது. தேர்தல் செலவுகளுக்காக இந்த பணம் பெறப்பட்டது எனவும் அமலாக்கத் துறை கூறியது. இந்தக் குற்றச்சாட்டால் சத்தீஸ்கர் மாநில அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது கவனிக்கத்தக்கது.