திருவண்ணாமலை: ‘நினைத்தாலே முக்தி தரும்’ திருவண்ணாமலை அண்ணா மலையார் கோயில் கார்த்திகை தீபத் திருவிழா, காவல் தெய்வ மான துர்க்கை அம்மன் உற்சவத் துடன் இன்று (நவ.14) மாலை தொடங்குகிறது. அண்ணாமலையார் கோயிலில் கார்த்திகை தீபத் திருவிழா, ஒவ்வொரு ஆண்டும் 17 நாட்கள் நடைபெறும். இந்தாண்டும், காவல்தெய்வமான துர்க்கை அம்மன் உற்சவத்துடன் இன்று (நவ.14) மாலை தொடங்குகிறது. இதையடுத்து, அண்ணாமலையார் கோயிலில் மூலவர் சந்நிதி முன்பு உள்ள தங்கக்கொடி மரத்தில் வரும் 17-ம் தேதி அதிகாலை 4.45 மணி முதல் 6.12 மணிக்குள் கொடியேற்றம் நடைபெறவுள்ளது. அதன் பிறகு, பஞ்சமூர்த்தி களின் 10 நாள் உற்சவம் தொடங்கி காலை மற்றும் இரவு நடைபெறும். நவ.22-ம் தேதி காலை 63 நாயன்மார்களின் உற்சவமும், அன்றிரவுவெள்ளி தேரோட்டமும் நடை பெறும்.

நவ.23-ல் மகா தேரோட்டம்: பத்து நாள் உற்சவத்தின் முக்கியநிகழ்வான மகா தேரோட்டம், வரும் 23-ம் தேதி காலை 7.30 மணி முதல் 8.30 மணிக்குள் தொடங்குகிறது. நவ.24-ம் தேதி மாலை 4 மணியளவில் தங்கமேருவில் பிச்சாண்டவர் உற்சவம் நடைபெறும். விழாவின் முக்கிய நிகழ்வான கார்த்திகை தீபத் திருவிழா நவ.26-ம்தேதி நடைபெறவுள்ளது. மூலவர் சந்நிதியில் அதிகாலை 4 மணியளவில் பரணி தீபம் ஏற்றப்படும். பஞ்சபூதங்களும் பரம்பொருளே என்பதை உணர்த்த, ஏகன் – அநேகன் தத்துவம் மூலம் எடுத்துரைக்கப்படும். அதன்பிறகு, பிரம்மதீர்த்தத்தில் தீர்த்தவாரி நடைபெறும்.

அர்த்தநாரீஸ்வரர் காட்சி: தீப தரிசன மண்டபத்தில் பஞ்சமூர்த்திகள் எழுந்தருள, மாலை 5.55 மணியளவில் தங்கக்கொடி மரம் முன்பு, ஆண் – பெண் சமம் என்ற தத்துவத்தை உலகுக்கு எடுத்துரைக்கும் வகையில், ‘அர்த்தநாரீஸ்வரர்’ காட்சி கொடுக்கவுள்ளார். இந்நிகழ்வு ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே நடைபெறும். இதையடுத்து, ‘மலையே மகேசன்’ என போற்றப்படும் 2,668அடி உயரம் உள்ள ‘திருஅண்ணாமலை’ உச்சியில் பருவத ராஜகுல வம்சத்தினர் 5 அடி உயரம் உள்ள கொப்பரையில் மகா தீபத்தை நவ. 26-ம் தேதி மாலை 6 மணியளவில் ஏற்றி வைக்கவுள்ளனர். அதைத் தொடர்ந்து தங்க ரிஷப வாகனங் களில் பஞ்சமூர்த்திகளின் மாட வீதியுலா நடைபெறும்.

அண்ணாமலையார் கிரிவலம்: மகா தீபத்தைத் தொடர்ந்து, ஐயங்குளத்தில் 3 நாள் தெப்பல் உற்சவம் நடைபெற உள்ளது. நவ.27-ம் தேதி இரவு சந்திரசேகரர், 28-ம் தேதி இரவு பராசக்தி அம்மன், 29-ம் தேதி முருகரின் தெப்பல் உற்சவம் நடைபெறும். பின்னர், 17-வது நாளான நவ.30-ம் தேதி நடைபெறும் சண்டிகேஸ்வரர் உற்சவத்துடன் (வெள்ளி ரிஷப வாகனம்) கார்த்திகை தீபத் திருவிழா நிறைவுபெறும். இவ்விழாவில் முக்கிய நிகழ்வாக, உண்ணாமுலை அம்மன் சமேத அண்ணாமலையார் (பெரிய நாயகர்) நவ.28-ம் தேதி கிரிவலம் சென்று பக்தர்களுக்கு அருள்பாலிக்க உள்ளார்.

Source link

By Admin S

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: