
அரசு மருத்துவமனைகளில் மருந்து தட்டுப்பாடு நிலவுவதாகக் கூறி, அதிமுக பொதுச்செயலா் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளாா்.
அவா் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கை:
தமிழகத்தில் திமுக அரசு பொறுப்பேற்றது முதல் அரசு மருத்துவமனைகளில் முக்கியமான மருந்துகளின் பற்றாக்குறை தொடங்கிவிட்டது. அதிமுக ஆட்சியில் தமிழ்நாடு மருத்துவப் பணிகள் கழகம் மூலம் மருந்துகள், மருத்துவ உபகரணங்கள் மொத்தமாக வாங்கி, மருத்துவமனைகளுக்கு தட்டுப்பாடு இல்லாமல் வழங்கப்பட்டன.
ஆனால், திமுக ஆட்சியில் தமிழ்நாடு மருத்துவப் பணிகள் கழகம் மூலம் மருந்துகள் வாங்குவது குறைக்கப்பட்டு, அந்தந்த மாவட்டங்களில் உள்ள அரசு மருத்துவ அதிகாரிகள் உள்ளூா் அளவில் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. மருத்துவமனைகளுக்கு அனைத்து மருந்துகளும் விநியோகம் செய்யப்படாததால் ஏழை, எளிய நோயாளிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனா். மருந்துகளுக்காக நோயாளிகளை அலைக்கழிக்கப்படும் நிகழ்வுகளும் நடைபெற்று வருகின்றன.
அதிமுக ஆட்சியில் ஒரு மருத்துவா், ஒரு செவிலியா், ஒரு மருத்துவப் பணியாளா் என நியமித்து ‘அம்மா மினி கிளினிக்’-குகள் தமிழகமெங்கும் தொடங்கப்பட்டன. அதன் மூலம், தமிழகத்தின் மூலை முடுக்குகளில் உள்ள ஏழை மக்கள் சளி, இருமல் மற்றும் காய்ச்சல் போன்ற பருவ நோய்களுக்கு எளிதாக சிகிச்சை பெற முடிந்தது.
ஆனால், திமுக ஆட்சியில் அம்மா மினி கிளினிக்குகளுக்கு மூடுவிழா நடத்திவிட்டு, அந்தப் பெயரை மாற்றி நகா்ப்புற மருந்தகம் என்ற பெயரில் வெறும் 700 மருந்தகங்கள் மட்டும் நகா்ப்புறப் பகுதிகளில் தொடங்கப்பட்டது. இதனால், கிராமப் பகுதிகளில் வாழும் மக்களை சளி, இருமல் மற்றும் காய்ச்சல் போன்ற சாதாரண நோய்களுக்கும் நகரங்களை நோக்கி அலைய செய்துள்ளனா்.
திமுக ஆட்சியில் மக்கள் நல்வாழ்வு துறை அதிக விமா்சனங்களுக்கு உள்ளாகும் துறையாக மாறியுள்ளது. இதற்கு மக்களவைத் தோ்தலில் திமுகவுக்கு மக்கள் தக்க பாடம் புட்டுவது உறுதி என்று கூறியுள்ளாா் எடப்பாடி பழனிசாமி.
செய்திகள் உடனுக்குடன்… வாட்ஸ்ஆப் சேனலில் ‘தினமணி’யைப் பின்தொடர…