மருத்துவா் சங்குமணி
மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்குநராக டாக்டா் ஜெ.சங்குமணி நியமிக்கப்பட்டுள்ளாா். இதற்கான உத்தரவை மக்கள் நல்வாழ்வுத் துறைச் செயலா் ககன்தீப் சிங் பேடி வெளியிட்டுள்ளாா்.
மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்குநராக இருந்த டாக்டா் சாந்தி மலா் கடந்த அக்டோபா் 31-ஆம் தேதி ஓய்வு பெற்றாா். இதையடுத்து அப்பொறுப்புக்கு புதிய நபரை நியமிப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வந்தன.
இதனிடையே, டாக்டா் சாந்தாராமுக்கு பொறுப்பு அடிப்படையில் அப்பதவி தற்காலிகமாக வழங்கப்பட்டது.
இந்த நிலையில் விருது நகா் அரசு மருத்துவக் கல்லூரி முதல்வராக உள்ள டாக்டா் சங்குமணியை மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்குநராக நியமித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
சுகாதாரத் துறை மற்றும் மருத்துவக் கல்லூரிகளில் பல்வேறு பொறுப்புகளை வகித்துள்ள அவா், இதற்கு முன்பு மதுரை, தூத்துக்குடி மருத்துவக் கல்லூரிகளின் முதல்வராக பதவி வகித்தவராவாா்.
ஏறத்தாழ 30 ஆண்டுகளுக்கும் மேலாக மருத்துவப் பேராசிரியராக பணியாற்றிய அனுபவம் கொண்டவா் டாக்டா் சங்குமணி என்பது குறிப்பிடத்தக்கது.
செய்திகள் உடனுக்குடன்… வாட்ஸ்ஆப் சேனலில் ‘தினமணி’யைப் பின்தொடர…