‘உங்களின் மிகப்பெரிய சாதனையாக நீங்கள் கருதுவது எது?’ என்று கேட்டபோது, ‘400 மில்லியன் மக்கள் அவர்களே அவர்களை ஆட்சிசெய்து கொள்ளும் வகையில் இந்தியாவை வடிவமைத்தது’ என்று மட்டுமே சொன்னார், நேரு. ஆம்! பைகளில் இருக்கும் வாக்குச்சீட்டை எடுத்துப் பாருங்கள். அதை நமக்கு அளித்தது ‘ஜனநாயகம்’. அந்த ஜனநாயகத்தை நமக்கு அளித்தவர், நேரு. ’நீங்கள் விட்டுச் செல்லும் விஷயமாக எது இருக்கும்?’ என்ற கேள்விக்கும், ‘ஜனநாயகம்தான்’ என்றே பதில் சொன்னார், அவர். இத்தகையவரின் பெயரை பல்கலைக் கழகத்துக்கு வைக்கக்கூடாது என்றால், வேறு யார் பெயரை வைப்பது?!

இதோ, இப்போது மோடி பிரதமராக இருக்கிறார். உள்துறை அமைச்சராக அமித் ஷா இருக்கிறார். எதிர்காலத்தில் யாரோ ஒருவர் வந்து, ‘அமித் ஷாவை பிரதமராக்கவிடாமல் மோடி தடுத்து விட்டார்’ என்று சொன்னால் ஏற்கமுடியுமா… அதுபோலத் தான், ’படேல் பிரதமராவதை நேரு தடுத்தார்’ என்ற பழிச்சொல்லும்.
படேல், இறுதிவரை காங்கிரஸ்காரராகவே இருந்தார். நர்மதை நதிக்கரையில் ஆயிரம் அடிகளுக்கு சிலை வைப்பதால் மட்டும், அவர் ’காங்கிரஸ்காரர் அல்லாதவர்’ ஆகிவிடமாட்டார். ஆக, இந்த அரசு இனிமேலும் படேல் – நேரு பஞ்சாயத்தையே வளர்க்காமல், வேறு வேலைகளில் கவனம் செலுத்துவது நல்லது.
நேருவை, தவறுகளே செய்யாத ஆட்சியாளனென்று காட்டுவது நோக்கமில்லை. அதை அவரேகூட ஏற்கமாட்டார். தனது நீண்ட ஆட்சிக்காலத்தில் இரண்டு பெரும் தவறுகளை அவர் செய்திருக்கிறார். காஷ்மீர் விவகாரத்தில் வாக்களித்தபடி பொதுவாக்கெடுப்பு நடத்தாதது அவரது, முதல் பெருந்தவறு. மகள் இந்திராவுக்கு காங்கிரஸ் கட்சிக்குள் அதிக இடம் கொடுத்தது, அவர் செய்த இரண்டாம் பெருந்தவறு.