ஓசூர்: ஓசூர் அருகே பட்டியலின மக்களுக்கு அரசு ஒதுக்கிய நிலத்தை திரும்ப வழங்கக் கோரி, விஷம் குடித்த பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். ஓசூர் அருகே சானமாவு கிராமத்தில் கெம்பையா என்பவருக்குச் சொந்தமான 2.38 ஏக்கர் நிலத்தை ஆதிதிராவிடர் நலத்துறை விலைக்கு வாங்கி, பட்டியலின மக்களுக்கு இலவச வீட்டு மனை வழங்கியது. இந்நிலையில், விலைக்கு வாங்கிய நிலத்தை தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என கெம்பையாவின் வாரிசுகள் வலியுறுத்தி வந்தனர்.
மேலும், இதுதொடர்பாக நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், பட்டியலின மக்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலத்தை அளவீடு செய்து பட்டியலின மக்களுக்கு வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து, நவம்பர் 8-ம் தேதி வருவாய்த் துறையினர் மற்றும் ஆதிதிராவிட நலத்துறையினர் போலீஸ் பாதுகாப்புடன் பட்டியலின மக்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலத்தை அளவீடு செய்ய நிலத்துக்குச் சென்றனர். அப்போது, அங்கு வந்த கெம்பையாவின் பேத்தி மாதேவம்மா (38), பேரன்கள் மஞ்சு (32), முருகேசன் (30) ஆகியோர் எதிர்ப்பு தெரிவித்ததோடு, 3 பேரும் விஷம் அருந்தினர்.

உடனடியாக 3 பேரையும் போலீஸார் மீட்டு ஓசூர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்குச் சேர்த்தனர். இதில், சிகிச்சை பலனின்றி மாதேவம்மா நேற்று உயிரிழந்தார். இதனிடையே, நேற்று மாலை பட்டியலின மக்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலத்தில் மாதேவம்மாவின் உடலை அடக்கம் செய்ய அவரது உறவினர்கள் ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு வந்தனர். இதை போலீஸார் மற்றும் வருவாய்த் துறையினர் தடுத்தனர். இதையடுத்து, மாதேவம்மாவின் உடலை சாலையில் வைத்து, அவரது உறவினர்கள் மறியலில் ஈடுபட்டனர்.
கூடுதல் காவல் கண்காணிப்பாளர் விவேகானந்தன், டிஎஸ்பி முரளி, வட்டாட்சியர் சக்திவேல் ஆகியோர் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். மேலும், நீதிமன்ற உத்தரவுப்படி பட்டியலின மக்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலத்தை உரிமை கொண்டாட முடியாது. வேண்டுமானால், நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யுங்கள் எனக் கூறினர். இதையேற்று, மறியலில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.