புதுடெல்லி: உ.பி. உள்ளிட்ட வட மாநிலங்களில் தீபாவளி பண்டிகை 5 நாட்கள் கொண்டாடப்படுகிறது. முதல் நாள் தந்தேரஸ் எனும் உலோகப் பண்டிகை, இரண்டாவது நாள் சோட்டி தீபாவளி எனும் சிறிய தீபாவளியை தொடர்ந்து மூன்றாவது நாளில் முக்கிய தீபாவளி கொண்டாடப்படுகிறது. நான்காவது நாளில் கோவர்தன் எனும் கோமாதா பூஜையும் கடைசி நாளில் பைய்யா தோஜ் எனும் சகோதரர்களுக்கான பண்டிகையும் கொண்டாடப்படுகிறது.
இந்த வருடம் கடந்த வெள்ளிக்கிழமை தொடங்கிய தந்தேரஸில் மக்கள், தங்கம், வெள்ளி, அலுமினியம், செம்பு என ஏதாவது ஒரு உலோகப் பொருளை வீட்டுக்கு வாங்கி வந்து பூஜை செய்வார்கள். இதேநாளில் நள்ளிரவு கான்பூரின் முக்கியப் பகுதியிலுள்ள மகாலட்சுமி கோயிலில் பக்தர்கள் லட்சுமி தேவிக்கு காணிக்கையாக ரூபாய் நோட்டுகளை செலுத்துகின்றனர்.
இவை ரூ.1 முதல் ரூ.500 வரையிலான நோட்டுக்களாக இருக்கும்.இதில், கோயிலின் லட்சுமிக்குஅலங்காரம் செய்யப்படுகிறது. பிறகு இந்த அலங்காரம் பிரிக்கப்பட்டு, முக்கிய தீபாவளி அன்று கோயிலுக்கு மீண்டும் வரும் பக்தர்களுக்கு பிரசாதமாக விநியோகிக்கப்படுகிறது. இந்த தொகை கடந்த வருடம் ரூ.12 லட்சமாக இருந்தது. இந்த வருடம்இது ரூ.17.5 லட்சமாக உயர்ந்துள்ளது.
இதுகுறித்து ‘இந்து தமிழ் திசை’ நாளிதழிடம் கான்பூர் மகாலட்சுமி கோயிலின் பூசாரி ஜிதேந்தர் மோகன் வாஜ்பாய் கூறும்போது, “கடந்த 2007-ம் ஆண்டு இக்கோயிலில் இந்த வழக்கம் தொடங்கியது. வருடாவருடம் அலங்காரத்துக்கு வரும் ரூபாய்நோட்டுகளின் மதிப்பு உயர்ந்துகொண்டே செல்கிறது. இவற்றை அளிக்கும் பக்தர்களின் பெயரை எழுதி வைத்து அவர்களுக்கே பிரசாதமாக தருகிறோம்” என்றார்.
தீபாவளி நாளில் பக்தர்கள் வரிசையில் காத்திருந்து இந்த ரூபாய் நோட்டுகளை பெற்றுச் செல்கின்றனர். இவற்றை தங்கள் வீடுகளில் மகாலட்சுமி படம் அல்லது சிலை முன்பு வைத்து பூஜை செய்கின்றனர். இதன்மூலம் தங்களுக்கு பணப் பற்றாக்குறை இருக்காது என நம்புகின்றனர். உ.பி.யில் மட்டுமின்றி, உத்தராகண்ட்,டெல்லி, மத்தியபிரதேசம், ராஜஸ்தான் போன்ற மாநிலங்களிலும் இதுபோன்ற வழக்கம் உள்ளது.